நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குறையும் அணை நீர்மட்டம்: நெல் விவசாயிகளுக்கு 'உலர் விதைப்பு' முறையைப் பரிந்துரைக்கும் மாடா

அலோர் ஸ்தார்:

மூடா விவசாய மேம்பாட்டு வாரியத்திற்கு (MADA) உட்பட்ட பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி, நீர் இருப்பு குறைவு காரணமாக, வரும் நெல் வயல் பருவத்திற்குப் பாசன நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதற்கு மாற்றாக, விவசாயிகள் 'உலர் நேரடி விதைப்பு' (Dry Direct Seeding) முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், இப்பகுதியிலுள்ள மூன்று முக்கிய அணைகளின் மொத்த நீர் இருப்பு 39 விழுக்காடாகக் குறைந்துள்ளதே இந்தத் தீர்மானத்திற்குக் காரணமாகும்.

இது குறித்துப் பேசிய மாடா தலைவர் டத்தோ டாக்டர் இஸ்மாயில் சல்லே, அணைகளில் நீர்மட்டம் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், குடிநீர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். உலர் விதைப்பு முறையில் களைகள், பயிர் நோய்கள் போன்ற சவால்கள் இருந்தாலும், சாகுபடி கால அட்டவணையைத் தாமதப்படுத்தினால் அது ஒட்டுமொத்த விளைச்சலையும் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

தற்போதைய நிலவரப்படி, மூடா அணை 8.04%, பெடு அணை 39.89%, அனிங் அணை 54.30% என்ற அளவிலேயே நீர் இருப்பைக் கொண்டுள்ளன. கடந்த 2017, 2020ஆம் ஆண்டுகளிலும் இத்தகைய சூழல் ஏற்பட்டதை நினைவு கூர்ந்த அவர், விவசாயிகளின் நலன், நாட்டின் உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். வரும் ஏப்ரல் மாதம் அடுத்த சாகுபடி சுழற்சி தொடங்கப்படவுள்ளது.

பாசனத்திற்கு நீர் நிறுத்தப்பட்டாலும், இப்பகுதியிலுள்ள 13 நீர்ச் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்றும், பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் தடையின்றித் தொடரும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். 2026ஆம் ஆண்டின் முதல் நெல் சாகுபடி பருவம் குறித்த இறுதி முடிவுகள் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset