நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத்திய கிழக்கு போரால் இந்திய, சீனப் பயணிகள் மலேசியாவுக்கு படையெடுப்பு

கோலாலம்பூர்: 

மேற்காசியாவில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடியால் உலகளாவிய பயண முறைகள் மாறியதால் குறிப்பாக இந்தியா, சீனா, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை மலேசியாவில் கணிசமாக அதிகரித்துள்ளது.

மலேசிய சுற்றுலா, பயண முகவர் சங்கத்தின் (MATTA) துணை தலைவர் டத்தோ முஹம்மத் ஹிஜாட் முஹம்மத் ஷா, இந்த ஆண்டு 4.3 கோடி சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரசாங்க இலக்கை நாடு தாண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எனினும், ரிங்கிட் மதிப்பு வலுவடைந்தாலும் இந்தியா, சீனா, சிங்கப்பூரிலிருந்தான சுற்றுலாப் பயணிகளின் வருகை வலுவாக தொடர்கிறது.

"இப்போது அவர்களுக்கு (இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு) ஓமன், குவைத், அபுதாபி, எமிரேட்ஸ் செல்ல முடியாது. அவர்களால் அங்கு செல்ல இயலாத நிலையில் மலேசியாவை நோக்கி திரும்புகின்றனர். சமீபத்தில் இந்தியாவில் மாத்தா  நடத்திய விளம்பரம், அரசாங்கம் இந்தியாவில் சாத்தே, பிற உணவுகளை விளம்பரப்படுத்தியதையும் கொண்டு, சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு சுற்றுலா அமைச்சகம் நிர்ணயித்த இலக்கையே மீறும் என்று நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.

இன்று மலேசியா சர்வதேச வர்த்தகம் மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெற்ற மாத்தா 2026-ல் சர்வதேச பிடித்தமான இடம் அறிவிப்பு நிகழ்வில் ஊடகங்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் விளக்கமளித்த அவர், தென்கிழக்கு ஆசிய சந்தையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிலும் உள்ளூர் சுற்றுலா முகவர்கள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளனர் என்று கூறினார்.

முன்பு ஐரோப்பாவிற்கு செல்ல விரும்பிய இந்தோனேசியா, பிலிப்பைன்சிஸ் சுற்றுலாப் பயணிகள் இப்போது மலேசியாவை மாற்று சுற்றுலா இடமாக கருத்தில் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, மாத்தாவின் கௌரவ பொருளாளர் ராக்கி கோ, சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சகம் (MOTAC) மூலம் அரசாங்கம் ஆசியான் பிராந்தியத்தில் சுற்றுலா விளம்பரத்தைத் தீவிரமாக வலுப்படுத்திக்கொண்டிருப்பதாகக் கூறினார்.

"யுத்தம் முடியும் வரை காத்திருக்காமல் (சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை) இலக்கை அடைய தென்கிழக்கு ஆசியா முழுவதும் பல சுற்றுப்பயணங்களை நடத்துவதாக சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சகம் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அவர்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதாக நான் கருதுகிறேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தரவின்படி, மலேசியா ஆசியான் பிராந்திய போக்குவரத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது. 2025-ல் சிங்கப்பூர் மட்டுமே 2.108 கோடி வருகைகளைப் பதிவு செய்தது, இது மொத்தம் 4.22 கோடி சர்வதேச சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட பாதியாகும் என்று குறிப்பிடத்தக்கது.

சீனா 46.6 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தோனேசியா 42.7 லட்சம் பயணிகளுடன் மூன்றாம் இடத்திலும், தாய்லாந்து 25 லட்சம் பயணிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளன.

ஐரோப்பிய, வளைகுடா சந்தைகள் மிகவும் சிறியதாக இருந்தன. இங்கிலாந்திலிருந்து 4,29,974 பயணிகளும், பிரான்சிலிருந்து 2,28,173 பயணிகளும், சவூதி அரேபியாவிலிருந்து 59,080 பயணிகளும், கத்தாரிலிருந்து 2,804 பயணிகளும் மட்டுமே வந்தனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset