நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதீனாவிலிருந்து கோலாலம்பூர் வந்த விமானத்தில் உயிர்நீத்த உம்ரா பயணி

கோலாலம்பூர்:

புனித உம்ரா பயணத்தை முடித்துக் கொண்டு மதீனாவிலிருந்து கோலாலம்பூர் திரும்பிக் கொண்டிருந்த விமானத்தில், முஹம்மத் ஜஃப்ரி இப்ராஹிம் என்ற 65 வயது மலேசியப் பயணி காலமானார். 

இச்சம்பவம் குறித்து விவரித்த பிரபல விளையாட்டு வர்ணனையாளர் டத்தோ ஜஸ்னி ஷாஃபி, உயிரிழந்த ஜஃப்ரி தமக்கு அருகாமையில் அமர்ந்து பயணம் செய்ததாகக் குறிப்பிட்டார். பயணம் தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, ஜாப்ரிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், சக பயணிகள், விமானப் பணியாளர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

விமானத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் அவருக்கு இதயச் செயலிழப்பு மீட்பு சிகிச்சை அளித்தும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

பஹாங் மாநிலத்தின் ஜண்டா பைக் பகுதியைச் சேர்ந்த ஜஃப்ரி, தனது குடும்பத்தினருடன் இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். 

மறைந்த ஜஃப்ரி மிகவும் அமைதியானவர் என்றும், எப்போதும் இன்முகத்துடன் பழகக்கூடியவர் என்றும் டத்தோ ஜஸ்னி அவரை நினைவு கூர்ந்தார். அவரது உடல் நேற்று தொழுகைக்குப் பிறகு ஜண்டா பைக் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த இக்கட்டான சூழலில் விமானப் பணியாளர்கள் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது என டத்தோ ஜஸ்னி தெரிவித்தார். விமானம் முழுமையாக நிரம்பியிருந்த போதிலும், மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர்கள் நிலைமையைக் கையாண்ட விதம், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியது வியக்கத்தக்கது என்றார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்கள் ஆயிரக்கணக்கானோரின் கவனத்தைப் பெற்றுள்ளன.

இந்தத் துயரச் சம்பவத்தின் மூலம், மரணம் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தழுவலாம் என்ற உண்மையை உணர முடிகிறது என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

இதுபோன்ற அவசர காலங்களில் அமைதியைக் கடைப்பிடித்து, விமானப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு புனிதப் பயணம் முடிந்து திரும்பும் வேளையில் நிகழ்ந்த இந்த மரணம், சக பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset