நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிபொருள் மானியத்தில் கட்டுப்பாடு: ரோன்95 பெட்ரோல் வாங்கும் வெளிநாட்டு வாகன உரிமையாளர்கள் மீது நேரடி நடவடிக்கை

புத்ராஜெயா:

மலேசியாவில் மானியம் வழங்கப்பட்ட 'ரோன்95' (RON95) ரக பெட்ரோலை, வெளிநாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் வாங்குவதற்கானத் தடை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. 

இதுநாள் வரை இத்தகைய விதிமீறல்களுக்குப் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் மீது மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி அந்த வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்கள் அல்லது உரிமையாளர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தடையை விரிவுபடுத்துவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார். 

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், நாட்டின் எரிபொருள் மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய சட்டக் கட்டமைப்பானது, வெளிநாட்டு வாகன உரிமையாளர்களை நேரடியாகச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரும்.

நாட்டின் வளங்கள் தகுதியுடையவர்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த அமைச்சின் அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றமானது எல்லைப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நிலவும் முறைகேடுகளைக் குறைக்கப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சட்டத்தை மீறும் வெளிநாட்டு வாகன ஓட்டுநர்கள் மீது எடுக்கப்படவுள்ள அபராதம் அல்லது இதர நடவடிக்கைகள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset