நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டீசல் விலை உயர்வு: லங்காவி படகுச் சேவைகள் அதிரடியாகக் குறைப்பு

லங்காவி:

லங்காவி தீவிற்கான படகுச் சேவைகளை இயக்கும் நிறுவனம், டீசல் விலை உயர்வு காரணமாகத் தனது தினசரிப் பயணங்களின் எண்ணிக்கையை ஐந்திலிருந்து மூன்றாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. 

தொழில்முறை டீசல் விலை நூறு விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ளதால், நிறுவனத்தின் இயக்கச் செலவுகளை ஈடுகட்டவும், ஊழியர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும் இந்த இக்கட்டான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 'ஃபெர்ரி லைன் வென்ச்சர்ஸ்' (Ferry Line Ventures) நிறுவனத்தின் பொது மேலாளர் டாக்டர் பஹாரின் பஹாரோம் கூறுகையில், அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்குப் பயணங்களைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார். 

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விமர்சனங்களை மறுத்த அவர், மற்ற சுற்றுலாத் தலங்களுடன் ஒப்பிடுகையில் லங்காவியில் படகு கட்டணம் மிகவும் குறைவாகவே உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

மலேசியாவின் மிகப்பெரிய படகுச் சேவை நிறுவனமான இது, 2005-ஆம் ஆண்டு ஏழு நிறுவனங்களின் இணைப்பால் உருவாக்கப்பட்டது.

ஒரு கடல் மைலுக்கு 88 காசுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், தியோமான் அல்லது பங்கோர் போன்ற இடங்களுக்குச் செல்ல இரண்டு ரிங்கிட் வரை செலவாகும் என்று அவர் ஒப்பிட்டுக் காட்டினார்.

பயணங்களின் குறைப்பு தற்காலிகமான ஒரு தற்காப்பு நடவடிக்கை என்றும் அவர் விளக்கமளித்தார். இதற்கிடையில், டீசல் விலை உயர்வினால் பொதுமக்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்க நிதி அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 'புடி டீசல்' திட்டத்தின் கீழ் தனிநபர்கள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த RM200 ரிங்கிட் இடைக்கால உதவித்தொகை, தற்போது 300 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. உலகளாவிய எரிபொருள் விலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset