நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூட்டு முயற்சியால் விளைந்த அற்புதம்: கலைநயத்துடன் மிளிரும் 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடி குடியிருப்பு

கிள்ளான்: 

சாதாரண ஏழ்மை நிலை அடுக்குமாடி குடியிருப்பு, இன்று அதன் குடியிருப்பாளர்களின் அயராத உழைப்பினால் ஒரு சொகுசு விடுதி போன்ற தோற்றத்திற்கு மாறியுள்ளது. 

கிள்ளான், 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜி பிரிவில் உள்ள மின்தூக்கி (Lift), நடைபாதை பகுதிகள், அங்கு வாழும் மக்களின் கூட்டு முயற்சியால் இவ்வாறு புதுப்பொலிவு பெற்றுள்ளன. தலைவர் நோரஸ்மான் அப்துல் வஹாப், கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றது முதல் இத்திட்டத்தை முன்னெடுத்தார். 

பகல் நேரங்களில் வேலைக்குச் செல்லும் குடியிருப்பாளர்கள், இரவு நேரங்களில் தன்னார்வத்துடன் ஒன்று கூடி சுமார் ஒரு மாத காலத்தில் இந்த மறுசீரமைப்புப் பணிகளைச் செய்துள்ளனர். ஒன்பது தளங்களைக் கொண்ட இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு தளமும் தனித்துவமான வண்ணங்கள், அலங்காரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தளத்திற்கும் தலா RM300 மலேசிய ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கூடுதல் செலவுகளை அந்தந்த தளத்தில் வசிக்கும் மக்களே பொறுப்பேற்றுக் கொண்டனர். 

குறைந்த வருமானப் பிரிவினர் என்றாலும், வேலை முடிந்து வீடு திரும்பும் போது ஒரு நிம்மதியான, ஆடம்பரமான சூழல் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருந்தது. மக்களின் ஆர்வத்தைத் தூண்ட தளங்களுக்கு இடையே போட்டிகளும் நடத்தப்பட்டன.

தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பு, வெளியூர் பயணிகளையும் கவரும் வகையில் ஒரு நடுத்தர வர்க்க நட்சத்திர விடுதியைப் போலக் காட்சியளிக்கிறது. மக்களின் ஒற்றுமையும், படைப்பாற்றலும் இருந்தால் ஒரு பாழடைந்த இடத்தையும் சொர்க்கமாக மாற்ற முடியும் என்பதற்குச் சான்றாக இந்த 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடி குடியிருப்பு திகழ்கிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset