நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடும் வெயிலால் நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: செபாட்டிக் தீவில் அவசரநிலை அறிவிப்பு

தவாவ்: 

சபா மாநிலத்தின் தவாவ் மாவட்டத்தில் உள்ள செபாட்டிக் தீவில், நீண்ட நாட்களாக நிலவி வரும் கடும் வறட்சி, வெப்பமான வானிலை காரணமாகப் பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

தவாவ் மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு இன்று காலை நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அக்குழுவின் தலைவரும் தவாவு நகராட்சி மன்றத் தலைவருமான டத்தோ ஜோசப் பாங் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட கள ஆய்வறிக்கைகளின் அடிப்படையில், அத்தீவில் நிலவும் வறட்சி நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கலாபக்கன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அண்டி முஹம்மத் சூர்யாடி பாண்டி பேசுகையில், நீண்ட கால வறட்சியால் அத்தீவின் நீர் ஆதாரங்கள் வற்றிப் போய்விட்டதாகவும், இது மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

தற்போது பெருநாள் காலத்தில், குடிநீர் தட்டுப்பாட்டினால் மக்கள் படும் இன்னல்களைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் முதன்மை நோக்கம் என அவர் தெரிவித்தார்.

இந்த அவசரநிலை பிரகடனத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகம், அவசர உதவிகளைச் சீரமைக்கப் பல்வேறு அரசு முகமைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 

வறட்சியின் பாதிப்பைக் குறைப்பதற்கான குறுகிய கால, நீண்ட காலத் தீர்வுகளைச் செயல்படுத்துவதுடன், நிலைமையை முன்கூட்டியே கணிக்கத் தொடர் கண்காணிப்புப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset