நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்பநிலை 35 டிகிரிக்கு மேல் இருந்தால் வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்க KPM உத்தரவு

புத்ராஜெயா: 

வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்குமானால் வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சகத்தின் (KPM)கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு தற்போது வெப்ப காலத்தைச் சந்தித்து வரும் நிலையில், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்கில் KPM வரையறுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய அறிக்கையில் KPM, மாணவர்களின் உடல் நலன் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வெப்பமான வானிலைக்கு மாணவர்களை வெளிப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு அதன் கீழ் உள்ள கல்வி நிறுவன நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டது.

மேலும், மாணவர்களுக்கு போதுமான அளவு தூய குடிநீர் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும், சொந்தமாக குடிநீர் கொண்டு வருவதற்கு ஊக்கமளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"முதல் பருவ விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் போது வெப்பமான வானிலையைச்  சமாளிக்க தயாரிப்புகளை அதிகரிக்கவும், நடவடிக்கைகளை செயல்படுத்தவும் KPM-இன் அனைத்து கல்வி நிறுவனங்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நிலைமை மிகவும் மோசமாக இருந்தாலும் அல்லது குடிநீர் பெறுவதற்கு வேறு வழியில்லாத பட்சத்தில் தங்கி படிக்கும் மாணவர்களுக்குக் குடிநீர் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்பமான வானிலையால் மாணவர்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வசதியாக அருகில் உள்ள கிளினிக்குகள், மருத்துவமனைகளுடன் நிர்வாகம் எப்போதும் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

"KPM-இன் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் தத்தமது பகுதிகளில் நிலவும் வெப்ப வானிலை நிகழ்வின் தற்போதைய நிலைமையைக் கவனிக்க வேண்டியதுடன் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

"வெப்பமான வானிலையின் போது  முறையான விளையாட்டு ஆடை அணிய மாணவர்கள், ஆசிரியர்கள், செயல்படுத்தும் குழு அங்கத்தினர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்குவது, தத்தமது நிறுவனத்தின் தேவையையும் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்."

இன்று BH செய்தித்தாள் வெளியிட்ட செய்தியில், காலநில , தட்பவெப்ப மாற்றம் நிபுணர்கள், எல் நினோ, புவி வெப்பமடைதலின் விளைவாக இந்த ஆண்டு மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நேற்று, மலேசியா வானிலை ஆய்வு திணைக்களத்தின் (METMalaysia) துணை இயக்குநர் (நடவடிக்கைகள்) அம்புன் டிண்டாங், மலேசியா 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையுடன் நிலை 3 வெப்ப வானிலை அல்லது தீவிர வெப்ப அலையைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், வலுவான எல் நினோ உட்பட பல வானிலை காரணிகளை பொறுத்தே இந்த நிலைமை அமையும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 1998-ல் பெர்லிஸ் மாநிலத்தின் சூப்பிங்கில் 40.1 டிகிரி செல்சியஸாக பதிவானது என்றும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset