நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்து ஊடுருவும் சட்டவிரோதக் குடியேறிகள்: போக்குவரத்துத் துறை அதிரடிச் சோதனை

கோத்தா பாரு:

எல்லை மாநிலங்களிலிருந்து கோலாலம்பூர், ஜொகூர் போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் விரைவுப் பேருந்துகளில், சட்டவிரோதக் குடியேறிகள் பயணம் செய்வதைச் சாலைப் போக்குவரத்துத் துறை கண்டறிந்துள்ளது. 

எல்லையோரப் பேருந்து நிலையங்களிலிருந்து இந்தப் பயணம் தொடங்குவதாக அத்துறையின் மூத்த அமலாக்கப் பணிப்பாளர் டத்தோ முஹம்மத் கிஃப்லி மா ஹசான் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, பல பயணிகள் முறையான பயண ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோர் ரோஹிங்கியா, வங்காளதேச இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கையும், ஜொகூர் பகுதிகளையும் இலக்காகக் கொண்டு பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை, இவர்கள் அனைவரும் பயணிகளாகவே கருதப்படுவர் என்றும், இருக்கைப் பட்டை அணியாதது போன்ற விதிமீறல்களுக்கு அவர்களுக்குச் சமான்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 

அதேவேளையில், ஆவணங்கள் இல்லாத சட்டவிரோதக் குடியேறிகள் மீதான மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்கள் குடிவரவுத் துறையிடம் ஒப்படைக்கப்படுவர்.

பயணிகளின் பாதுகாப்பு, விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய இத்தகைய அமலாக்கச் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என டத்தோ முஹம்மத் கிப்லி வலியுறுத்தினார். 
குறிப்பாக, இருக்கைப் பட்டை அணிவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset