நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் நீர்வளப் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய இலக்கு: துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் அறிவிப்பு

கோலாலம்பூர்:

நாட்டில் நிலவும் கணக்கிடப்படாத நீர் இழப்பு (NRW), குழாய் கசிவு, நீர் திருட்டு போன்ற சிக்கல்கள் நீர் விநியோகக் கட்டமைப்பின் திறனைப் பாதிப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் அறிவித்துள்ளார். 

உலக நீர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில், இந்த நீர் இழப்பைக் குறைக்கவும், கட்டமைப்புகளை நவீனப்படுத்தவும் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

எரிசக்தி, நீர் உருமாற்ற அமைச்சருமான அவர், நீர் மேலாண்மையை வலுப்படுத்த 'ஸ்மார்ட்' தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது அவசியம் என்றார். 

இதற்காக "நீர் உருமாற்றத் திட்டம் 2040" (AIR 2040) எனும் நீண்டகாலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தூய்மையான, பாதுகாப்பான நீர் விநியோகம் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம், விரைவான நகரமயமாக்கல் போன்ற சவால்களுக்கு மத்தியில், நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். 

ஆறுகளையும், அணைகளையும் பாதுகாப்பதுடன், நீர் சேமிப்பை மக்கள் ஒரு கலாச்சாரமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு தேசிய அளவிலான உலக நீர் தினத்தின் கருப்பொருள் "நீர் அனைவருக்கும் சொந்தம்" என்பதாகும். இது பாலின பாகுபாடின்றி ஒவ்வொரு தனிமனிதனும் சுத்தமான, பாதுகாப்பான நீரைப் பெறுவதற்கான உரிமையை வலியுறுத்துகிறது. 

அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நீர்வளப் பாதுகாப்பை முழுமையாக அடைய முடியும் எனத் துணை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset