நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாற்றுத்திறனாளி பெண் ஊழியரைத் தாக்கிய சமூக ஊடகப் பிரபலத்துக்கு RM2000 ரிங்கிட் அபராதம்

பெட்டாலிங் ஜெயா: 

கடந்த டிசம்பர் மாதம் துரித உணவகம் ஒன்றில் பணிபுரிந்த மாற்றுத்திறனாளி பெண் ஊழியரைத் தாக்கிய சமூக ஊடகப் பிரபலம் ஒருவருக்குப் பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 

தகவல் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணியாற்றும் 41 வயது நளினி, தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மஜிஸ்திரேட் அமிரா சாரியாட்டி ஜைனல் இந்தத் தண்டனையை வழங்கினார்.

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி, ஸ்ரீ கெம்பாங்கான், செர்டாங் ராயாவில் உள்ள ஒரு துரித உணவகத்தில் வைத்து, 45 வயதான ராணி ஆறுமுகம் என்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணைத் தாக்கியதாக நளினி மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு காயம் ஏற்படுத்தியதற்காகத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 322-ன் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்தச் சட்டப்பிரிவின் கீழ் ஒருவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, நளினி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இருப்பினும், அவருக்கு விதிக்கப்பட்ட 2,000 ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார். தீர்ப்பு வெளியான உடனேயே அபராதத் தொகையைச் செலுத்தியதை அடுத்து, நளினி விடுவிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தேவனேசன் கணேசன் உறுதிப்படுத்தினார்.

சமூகத்தில் செல்வாக்கு மிக்க நிலையில் இருப்பவர்கள் இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது எனப் பல்வேறு தரப்பினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட பெண் சார்பில் லாவேந்திரன் நாயர் எனும் வழக்கறிஞர் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset