நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தூண்டிவிடுபவர்களாகச் செயல்படுவதை நிறுத்துங்கள்; நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உணர்வுப்பூர்வமான விவகாரங்களை விவேகத்துடன் கையாளுங்கள்

கோலாலம்பூர்:

குறுகிய அரசியல் -  தனிப்பட்ட நலன்களுக்காகப் பொறுப்பற்ற சில தனிநபர்களால் தூண்டிவிடப்படும் இனவாத அரசியலை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் வர்த்தகச் சமூகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மலாய் வர்த்தகச் சபையின் தலைவர் நோர்ஷாஹரின் பின் ஹமிடோன் கூறுகையில், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பது வெறும் சமூக மதிப்பு மட்டுமல்ல, அது நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையின் முதுகெலும்பாகும் என உறுதிபடத் தெரிவித்தார். 

அமைதியான சூழலிலும், மக்கள் ஒருவரையொருவர் மதித்து வாழும் நிலையிலும் மட்டுமே வர்த்தக உலகம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் பலமே அதன் பன்முகத்தன்மையில் தான் உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், சில தரப்பினர் இன மற்றும் மத ரீதியான தீயைப் பற்றவைக்கும் தூண்டிவிடுபவர்களாக செயல்படும்போது, அவர்கள் மக்களுக்கிடையிலான உறவைச் சிதைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார எதிர்காலத்தையும் பணயம் வைக்கிறார்கள் என்றார். 

முதலீட்டாளர்கள் சமூக நிலைத்தன்மையையே தங்களின் நம்பிக்கைக்கு அடிப்படையாகப் பார்க்கிறார்கள் என்றும், இனவாதச் சூழலால் நாடு சீர்குலைந்தால் அது ஒட்டுமொத்தப் பொருளாதார வாய்ப்புகளையும் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார். 

மேலும், புனிதமான இந்த ரமலான் மாதத்தில் பொறுமை மற்றும் பரஸ்பர மரியாதையைப் பின்பற்றி, மக்கள் இத்தகைய சதிகாரர்களின் வலையில் விழக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

3ஆர் தொடர்பான விவகாரங்களை அரசாங்கம் விவேகத்துடன் கையாள வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் அனைத்துத் தரப்பினருக்கும் சமமான நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் (மிம்கோய்ன்) தலைவர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமிட் கூறுகையில், 

அரசியல் நலன்களுக்காகச் சமுதாயத்தைப் பிளவுபடுத்த முயலும் சில தனிநபர்களின் முயற்சியில் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தெரிவித்தார். 

இந்தியச் சமூகத்திற்குள் கோபத்தைத் தூண்டிவிட்டு, அவர்களைப் பிரிப்பதன் மூலம் தங்களின் அரசியல் லாபத்திற்காகச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொள்ள ஒரு சிறு கும்பல் முயன்று வருவதாக அவர் சாடினார்.

சமூகத்தை இரு பிரிவுகளாகப் பிரித்து, ஒரு தரப்புடன் கைகோர்த்துக் கொண்டு இனவாதத் தீயை வளர்க்க முயல்பவர்கள் யார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார். 

பெரும்பான்மையான இந்தியச் சமூகம் நாட்டின் நிலைத்தன்மை, சிறந்த பொருளாதார வாய்ப்புகள் மற்றும் அனைத்து இனங்களுடனும் இணக்கமான உறவையே விரும்புவதாக அவர் தெரிவித்தார். 

நாட்டின் தற்போதைய பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும், தென்கிழக்கு ஆசியாவிலேயே மலேசியாவின் நிதிநிலை மிக உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் இந்த வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களே இத்தகைய தூண்டுதல்களில் ஈடுபடுவதாகக் கூறினார்.

அரசியல் ரீதியாகச் சிந்திப்பதற்குப் புதிய யோசனைகள் இல்லாத காரணத்தால், இன உணர்வுகளைத் தூண்டி ஆதரவு தேட முயலும் அரசியல்வாதிகளையும் ஏஜென்ட்டுகளையும் இரு தலைவர்களும் கடுமையாகச் சாடினர். 

தங்களை இனத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்பவர்கள், உண்மையில் வெறும் தூண்டுதல்காரர்களாகவே இருக்கிறார்கள் என்றும், மக்களுக்கு உதவ வழியில்லாத போது அவர்கள் இனவாதத்தை ஒரு குறுக்கு வழியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இனவாதத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மலேசியா ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவான நாடு என்பதை அவர்கள் நினைவுறுத்தினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset