நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகரித்த போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர்: 

மலேசியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை முதல் வாகனப் போக்குவரத்து மிகவும் மந்தமாக உள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது. 

ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களுக்காகப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பல பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

குறிப்பாக புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில், செத்தியா ஆலம் முதல் ஷா ஆலம் வரையிலும், கோத்தா டாமன்சாரா முதல் டாமன்சாரா வரையிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கிமீ 185.5-இல் ஏற்பட்ட விபத்து காரணமாக புக்கிட் மேரா, அலோர் பொங்சு இடையிலான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான வாகனம் சாலையின் இரு வழித்தடங்களையும் மறைத்து நின்றதால் அங்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. 

கிள்ளான் பள்ளத்தாக்கின் முக்கியச் சாலைகளான ஷா ஆலம் நெடுஞ்சாலை, டாமன்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலை, நியூ பந்தாய் நெடுஞ்சாலை ஆகியவற்றிலும் கடுமையான நெரிசல் பதிவாகியுள்ளது. பண்டிகை நெருங்கி வருவதால், வரும் நாட்களில் வாகனப் போக்குவரத்து இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுஞ்சாலை வாரியம் பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலில், நீண்ட தூரப் பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பாகப் போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொண்டு திட்டமிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், சாலைகளில் கவனமுடனும் பாதுகாப்பாகவும் வாகனங்களை இயக்குமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset