நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா பாரு - கோம்பாக் இடையிலான இரயில் பாதை பணிகள் முன்கூட்டியே நிறைவு

கோத்தபாரு:

கிளாந்தான் மாநிலத்தின் கோத்தா பாரு முதல் சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் வரையிலான 519 கிலோமீட்டர் நீளமுள்ள கிழக்குக் கடற்கரை இரயில் இணைப்பு (ECRL) திட்டத்தின் தண்டவாளம் அமைக்கும் பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. 

இத் திட்டத்தின் முக்கிய ஒப்பந்ததாரரான சீனா கம்யூனிகேஷன்ஸ் கட்டுமானம் நிறுவனம், கட்டுமானப் பணிகள் முடிவடைந்து தற்போது அதிகாரப்பூர்வமாகச் சோதனை, தரச்சான்றிதழ் பெறும் கட்டத்திற்குத் திட்டம் நகர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.

மாரானிலிருந்து கோம்பாக் வரையிலான 126 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இறுதிக்கட்டப் பணிகள், கடந்த 2025 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது 2026 பிப்ரவரி 5-ஆம் தேதியன்று முடிக்கப்பட்டுள்ளன. இது திட்டமிடப்பட்ட காலத்தை விட இரண்டு வாரங்கள் முன்னதாகவே முடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தண்டவாளங்கள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், மின்சார இரயில்களின் வருகையைத் தொடர்ந்து, சுமார் 8,000 கிலோமீட்டர் தூரத்திற்கான தடையற்ற சோதனை ஓட்டப் பயணங்கள் தொடங்கப்பட உள்ளன.

இத் திட்டம் குறித்து 2027 ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டுள்ள முழுமையான செயல்பாட்டை நோக்கி ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

கடந்த 2023 டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள், தற்போது 92.62 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளன. பாதுகாப்பான, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்குவதில் தங்களின் அர்ப்பணிப்பை இச்சாதனை பிரதிபலிப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கோத்தா பாருவில் தொடங்கி குவாந்தான் வழியாகக் கோம்பாக் வரை நீளும் இந்த இரயில் பாதை, நாட்டின் கிழக்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கப் போகிறது. அனைத்துக் கட்டப் பணிகளும் சீரான வேகத்தில் நடைபெற்று வருவதால், குறித்த காலத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த இரயில் சேவை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset