நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமான நிலையத்தில் 24 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஆடவர் கைது

மிரி:

சரவாக் மாநிலத்தின் மிரி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சுமார் 7,83,552 ரிங்கிட் மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் வகை போதைப்பொருளை மலேசிய அரச சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி மாலை 5.15 மணியளவில், சந்தேகத்திற்குரிய வகையில் பயணித்த ஒரு நபரைக் கைது செய்து அவரிடமிருந்த உடைமைகளைச் சோதனையிட்டபோது இக்கடத்தல் அம்பலமானது.

கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மிரி வந்தடைந்த அந்தப் பயணியின் பைகளில், 21 சீனத் தேயிலைப் பொட்டலங்களும், 3 மங்குஸ்தான் பழத் தயாரிப்புப் பொட்டலங்களும் இருந்தன. அவற்றைச் சோதித்தபோது, உள்ளே தேயிலைக்குப் பதிலாகப் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மொத்தம் 24,486 கிராம் எடையுள்ள இந்தப் போதைப்பொருட்களைச் சுங்கத்துறையினர் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, தீபகற்ப மலேசியாவிலிருந்து உள்நாட்டு விமானச் சேவையைப் பயன்படுத்திச் சரவாக் மாநிலத்திற்குள் போதைப்பொருட்களைக் கடத்தி வருவது இக்கடத்தல்காரர்களின் உத்தியாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் மிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டானது 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B(1)-ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படி வரை விதிக்கப்பட சட்டத்தில் இடமுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகச் சுங்கத்துறை தனது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset