நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலையில் சுற்றி திரியும் விலங்குகளால் உயரும் விபத்துகள்: உரிமையாளர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டம்

கோலாலம்பூர்: 

மலேசியாவில் சாலைகளில் தன்னிச்சையாகத் திரியும் விலங்குகளால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்குத் தீர்வாக, பசு, எருமை உள்ளிட்ட விலங்குகளுக்கு அடையாளக் குறியீடுகளை இடுவதைக் கட்டாயமாக்கும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதன் மூலம், விபத்துகளுக்குக் காரணமான விலங்குகளின் உரிமையாளர்களை எளிதில் அடையாளம் கண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும், வனவிலங்குகளால் சுமார் 14,560 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையிலான இடைவெளியில், இருசக்கர வாகன ஓட்டிகளே இத்தகைய விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

மாடுகள், எருமைகள் திடீரென சாலையைக் கடக்கும்போது அல்லது அவற்றின் மீது மோதாமல் இருக்க வாகனத்தைத் திருப்ப முயலும்போது இக்கோர விபத்துகள் நிகழ்கின்றன.

தற்போதுள்ள நடைமுறைப்படி, மாடுகள் அல்லது எருமைகளின் காதுகளில் அடையாளக் குறியீடுகள் இடப்பட்டாலும், பல வளர்ப்பாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. விபத்து நடக்கும்போது பொறுப்பேற்க மறுக்கும் உரிமையாளர்கள், விலங்குகள் காணாமல் போகும்போது மட்டும் புகார் அளிக்க முன்வருகின்றனர். 

எனவே, 1987-ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், அலட்சியமாகச் செயல்படும் விலங்குகளின் உரிமையாளர்களுக்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 20,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset