நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வன்முறையும் அரசியல் மோதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என மலேசியா தொடர்ந்து வலியுறுத்தும்: அன்வார்

கோலாலம்பூர்: 

வன்முறைகளை உடனடியாக நிறுத்தவும், பதற்றத்தைத் தணிக்கவும், சர்வதேச சட்டத்தையும் மனித மரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட தூதரக வழிகளை மீண்டும் செயல்படுத்தவும் மலேசியா தெளிவான, கொள்கைமிக்க நிலைப்பாட்டுடன் தொடர்ந்து வலியுறுத்தும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

உலகம் தொடர்ந்து மோதல்கலாளும் அரசியல் பதற்றங்களாலும் பாதிக்கப்படும் சூழலில், அநீதியும் அடக்குமுறையும் தொடர அனுமதிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.

“இன்று மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர், இஸ்ரேல் ஆட்சியால் தொடங்கப்பட்டதுடன் அமெரிக்க இராணுவத்தின் ஆதரவையும் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் விவாதம் வெறும் உயிரிழப்புகள் அல்லது கட்டமைப்பு சேதங்கள் பற்றியது மட்டும் அல்ல; மனிதாபிமான அம்சங்களைப் பொருட்படுத்தாமல் ஒரு பகுதியின் நிலப்பரப்பையும் செல்வாக்கையும் ஆதிக்கம் செலுத்தும் அபாயகரமான போக்கை இது காட்டுகிறது.

“இந்தப் போரில் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களும் நீண்டகால அச்சம், இழப்பு, மன உளைச்சலுடன் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

“இதன் பின்னணியில், இன்று நடைபெற்ற மலேசிய மடானி அறிஞர் மன்றம் உலகைப் பாதிக்கும் அரசியல் சவால்களை நியாயமான முறையில் ஆராயும் முக்கிய மேடையாக அமைகிறது.

“மேலும், வளர்ச்சி, வறுமை, உலக ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை நீண்ட காலமாக ஆராய்ந்து வரும் அறிஞரும் நண்பருமான பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று அவர் நேற்று இரவு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

இத்தகைய அறிவியல் சார்ந்த உரையாடல்கள் துணிச்சலான, நியாயமான, கொள்கைநிலையான சிந்தனைகளை ஊக்குவித்து, உலகளாவிய மனித மரியாதையையும் நியாய உணர்வையும் பாதுகாக்க உதவும் என அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், பிரதமர் மற்றொரு முகநூல் பதிவில், ஒரு நாட்டின் உண்மையான நிலைத்தன்மை அதன் மக்களின் ஒற்றுமை, நாட்டின் எதிர்காலத்தை முன்னேற்ற ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதிலேயே அமைந்துள்ளது என்று கூறினார்.

சபாவிற்கு மேற்கொண்ட தனது பயணம் பல்வேறு சமூகத்தினருடன் சந்தித்து உரையாடும் வாய்ப்பை அளித்ததாகவும், அதில் உள்ளூர் தலைவர்கள், அரசுப் பணியாளர்கள், சிறு வணிகர்கள், மாநிலத்திற்கும் நாட்டிற்கும் எதிர்கால நம்பிக்கையாகக் கருதப்படும் இளைஞர்களும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

“மலேசியாவின் வலிமை அதன் இயற்கை வளங்களில் மட்டுமல்ல; பரஸ்பர மரியாதையிலும் கூடி  வாழும் மக்களின் ஒற்றுமையிலும் உள்ளது. மேலும், மலேசியா ஒப்பந்தம் 1963 (MA63) கீழ் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக செயல்படும்,” என்றும் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset