நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓய்வுபெற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு வகுப்பு E உரிமம்: அரசு சிறப்பு திட்டம்

கிள்ளான்: 

ஓய்வுபெற்றவர்களுக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் கனரக வாகனங்களை இயக்குவதற்கான வகுப்பு E ஓட்டுநர் உரிமம் பெற சிறப்பு திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

இந்த புதிய முயற்சி ஹாலியர், லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் காணப்படும் கனரக வாகன ஓட்டுநர் பற்றாக்குறையைச் சமாளிக்க தேவையானதாகக் கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.

மேலும், 40 வயதிற்கு உட்பட்ட பல முன்னாள் ராணுவ வீரர்கள் இன்னும் உற்சாகத்துடனும் உடல் வலிமையுடனும் இருப்பதால், அவர்கள் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்கக்கூடிய திறன் கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அதனால், ஓட்டுநர் திறமை பெற்ற முன்னாள் ராணுவத்தினரை அடையாளம் கண்டு, அவர்களிடம் ஏற்கனவே உள்ள ராணுவ ஓட்டுநர் உரிமத்தை நேரடியாக வகுப்பு E உரிமமாக மாற்றும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

“சமீபத்தில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப, தொழில் பயிற்சி கவுன்சில் (TVET) கூட்டத்தில், இவர்களுக்கு இந்தச் சிறப்பு உரிமம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற கிள்ளான் துறைமுக ஆணையம் (LPK) இணை கட்டிடம் திறப்பு விழா, சீன புத்தாண்டு – ரமலான் இப்தார் நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

இதனையடுத்து, அனைத்து லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களும் இந்த ஓய்வுபெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“முன்னாள் ராணுவ வீரர்கள் ஒழுக்கம், பொறுமை, திறமை கொண்டவர்கள் என்பதால் பல நிறுவனங்கள் அவர்களை வரவேற்கும் என நான் நம்புகிறேன்.

“இந்த முயற்சியை விரைவாகவும் முழுமையாகவும் செயல்படுத்த விரும்புகிறோம். இதற்காக, சாலை போக்குவரத்து துறை (JPJ), முன்னாள் ராணுவ நலக் கழகம் (PERHEBAT) ஆகியவை ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset