நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு மாதத்தில் பள்ளிவாசல் முன்பு கைகலப்பு: ஒன்பது பேரைப் போலிசார் கைது செய்தனர்

மலாக்கா: 

தங்கா பாத்து அர்-ரப்பானி பள்ளிவாசல் முன்பு அதிகாலை ஏற்பட்ட சண்டையையடுத்து, ஒரு பள்ளி மாணவர் உட்பட ஒன்பது பேரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.

 18 முதல் 30 வயதுக்குள் உள்ள அனைத்து சந்தேக நபர்களும் சம்பவம் நடந்த நாளிலேயே தங்கா பாத்து சுற்றுவட்டாரத்தில் கைது செய்யப்பட்டனர் என்று மலாக்கா மாநில போலிஸ் தலைவர் டத்தோ ட்ஸுல்கைரி முக்தார் கூறியுள்ளார்.

“சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் ஒரு நாளும் மற்றவர்கள் மூன்று நாட்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“சண்டையில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் உள்ளிட்ட பல பொருட்களையும் போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்,” என்று அவர் நேற்று மலாக்கா தெங்கா மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த வாரம் அந்த பகுதியில் சாலை கும்பல் நடவடிக்கைகளை ஒடுக்க போக்குவரத்து போலிசார் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு சிலரைக் கைது செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், அந்த மோட்டார் சைக்கிள் கும்பல் மீண்டும் கூடிவந்து, போலிசாரைச் சவாலுக்கு உட்படுத்துவது போல நடந்துகொண்டதாக அவர் கூறினார்.

“இந்த முறை அவர்கள் மிகுந்த மரியாதையற்ற முறையில் நடந்துகொண்டுள்ளனர். அதுவும் நோன்பு மாதத்தில், பள்ளிவாசல் முன்பாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

“இந்த வகை கும்பல்களுக்கு எங்களால் எந்தவித தளர்வும் வழங்கப்படாது; அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வோம்,” என்று அவர் எச்சரித்தார்.

இதற்கு முன், அர்-ரப்பானி பள்ளிவாசல் அருகே சாலையோரத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 24 வயதுடைய கட்டுமானத் தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதிகாலை 4 மணியளவில் நடைபெற்ற சம்பவத்தில், தனது தம்பி மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதற்குக் காரணம் அந்த தொழிலாளி என குற்றம்சாட்டிய ஒருவர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்த நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை முற்றுகையிட்டு, தலைக்கவசத்தால் தாக்கியதாக போலிசார் தெரிவித்தனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset