நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

"பிரிந்தவர்கள் மீண்டும் இணைவோம்": அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமத் ஜாஹித்

கோலாலம்பூர்: 

அம்னோ கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன், மீண்டும் கட்சியில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ மேன்முறையீட்டு கடிதத்தை வழங்கியுள்ளார். இந்தக் கடிதத்தை நேற்றிரவு தாம் நேரில் பெற்றுக்கொண்டதாக அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமத் ஜாஹித் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், கைரியின் விண்ணப்பம் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் தலைமையிலான 'ரூமா பங்சா' ஒருங்கிணைப்புக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

"பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதும், தூரமானவர்கள் மீண்டும் நெருங்குவதுமே இந்தப் போராட்டக் குடும்பத்தின் உண்மையான அடையாளம்" என்று குறிப்பிட்ட ஜாஹித் ஹமிடி, பிளவுகளை வளர்ப்பதை விட ஒற்றுமையைக் காண்பதே கட்சியின் நோக்கம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

அம்னோவை மீண்டும் மலாய்க்காரர்களின் அரசியல் மையமாக வலுப்படுத்துவதற்கு இந்த 'ரூமா பங்சா' முயற்சி ஓர் அடித்தளமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கைரி ஜமாலுதீனைத் தொடர்ந்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசைன் உள்ளிட்ட இன்னும் பல முக்கியத் தலைவர்களும் மீண்டும் அம்னோவில் இணைய விருப்பம் தெரிவித்துக் கடிதம் வழங்கியுள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார். 

ரமலான் மாதத்தின் இறுதி இரவில் கிடைத்துள்ள இந்தச் செய்தி மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தலைவர்களின் வருகை அம்னோவின் அரசியல் பலத்தை மீண்டும் மீட்டெடுக்கும் என்றும், இஸ்லாம், மலாய்க்காரர்களின் நலன்களைப் பாதுகாக்கும் கட்சியின் போராட்டத்திற்குப் புதிய உத்வேகத்தைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset