நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“கேபிள் திருட்டில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்”: போக்குவரத்து அமைச்சு

புத்ராஜெயா: 

ரயில் போக்குவரத்து அமைப்புகளில் கேபிள் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு ஏதுவாக, தற்போதைய சட்டங்களில் திருத்தம் செய்யுமாறு போக்குவரத்து அமைச்சு (MOT), உள்நாட்டு விவகார அமைச்சுக்கு (KDN) பரிந்துரை செய்துள்ளது. 

இத்தகைய செயல்கள் வெறும் சாதாரண திருட்டு குற்றங்கள் அல்ல என்றும், இவை பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளையும் வெகுவாகப் பாதிக்கின்றன என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஸ்ரீ டாமன்சாரா மேற்கு எம்.ஆர்.டி நிலையத்தில் நடந்த கேபிள் திருட்டு சம்பவத்தால், புத்ராஜெயா வழித்தட ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்குப் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். 

இச்சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களைப் போலிசார் கைது செய்துள்ள நிலையில், ரயில்வே கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்கள், இழப்புகளுக்கு ஈடாக தற்போதைய அபராதத் தொகைகள் போதுமானதாக இல்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது, எல்.ஆர்.டி (LRT), எம்.ஆர்.டி (MRT), கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) போன்ற திட்டங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டத்திருத்தப் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் அந்தோணி லோக் செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார். கேபிள் திருட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தடையற்ற ரயில் சேவையை உறுதி செய்ய முடியும் என போக்குவரத்து அமைச்சு நம்புகிறது.

இந்தக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் குறையும் என்றும், பொதுப் போக்குவரத்துச் சொத்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset