நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரமலான் சந்தைகளில் குவியும் குப்பைகள் அதிகம்”: ஷரிமான் யூசுப் அறிவிப்பு

கோலாலம்பூர்: 

ரமலான் மாதத்தின் முதல் 25 நாட்களில், கோலாலம்பூரில் மட்டும் 45,108 டன் வீட்டுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக 'ஆலம் ஃப்ளோரா' (Alam Flora) நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 23 விழுக்காடு அதிகமாகும்.

அதேவேளையில், புத்ராஜெயாவில் கழிவுகளின் அளவு நிலையாக உள்ள நிலையில், பஹாங் மாநிலத்தில் கடந்த ஆண்டை விட 28 விழுக்காடு சரிவு பதிவாகியுள்ளது.

ரமலான் சந்தைகளில் விற்கப்படும் மிஞ்சிய உணவுகள், நெகிழிப் பைகள், 'பாலிஸ்டிரீன்' (Polystyrene) பெட்டிகளே இந்தக் கழிவு அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன. பொதுமக்கள் உணவு வாங்கச் செல்லும்போது சொந்தமாக உணவுக் கொள்கலன்களை எடுத்துச் செல்வதன் மூலம் இத்தகைய கழிவுகளைக் குறைக்க முடியும் என்று ஆலம் ஃப்ளோரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷரிமான் யூசுப் முஹம்மத் ஜெயின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024 முதல் 2026 வரையிலான புள்ளிவிவரங்களின்படி, ரமலான் மாதத்தில் குப்பைகள் சேகரிக்கப்படும் அளவு தொடர்ந்து ஏற்றமாகவே உள்ளது. மக்கள் முறையான திட்டமிடலுடன் உணவுகளை வாங்கினால், சுமார் 60 விழுக்காடு உணவு வீணாவதைத் தவிர்க்கலாம் என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் தூய்மையைப் பேண ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளையும், உணவுப் பொருட்களையும் தனித்தனியாகப் பிரித்து, பிளாஸ்டிக் பைகளில் முறையாகக் கட்டி குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் வைக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதன் மூலம் கழிவு மேலாண்மைப் பணிகளை எவ்விதத் தடையுமின்றி மேற்கொள்ள முடியும் என ஆலம் ஃப்ளோரா நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset