நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'ஓப் லாராஸ்' நடவடிக்கையில் சிக்கிய கள்ளத் துப்பாக்கிகள்: ஆடவர் கைது

மலாக்கா: 

மலாக்கா, தஞ்சோங் மீன்யாக் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், போலி ஆயுதங்களை நவீன முறையில் மாற்றியமைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 42 வயது உள்ளூர் நபர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர். 

'ஓப் லாராஸ்' எனும் அதிரடி நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், ஒரு உண்மையான கைத்துப்பாக்கி, ஆறு ஏர் ரைபிள்ஸ், 100 தோட்டாக்கள், ஆயுதங்களை மாற்றியமைக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சோதனைக் குறித்துப் மலாக்கா மாநிலப் போலிஸ் தலைவர் டத்தோ துல்கைரி முக்தார், இந்தச் சந்தேக நபர் இந்தோனேசியாவிலிருந்து போலி ஆயுதங்களைச் சுமார் 1,000 முதல் 1,500 ரிங்கிட் விலைக்கு வாங்கி, பின்னர் அவற்றை யூடியூப் மூலம் கற்றுக்கொண்ட நுட்பங்களைக் கொண்டு மாற்றியமைத்ததாகக் கூறினார். 

அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட துப்பாக்கிகள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 3,000 முதல் 3,500 ரிங்கிட் வரையிலான விலைக்கு விற்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் மெத்தாம்பேட்டமைன் எனும் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இவர் மீது ஏற்கனவே 2022-ஆம் ஆண்டில் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, வீடு புகுந்து திருடுதல், மிரட்டல் போன்ற குற்றப் பின்னணிகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி ஏதேனும் குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிய அது தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது இந்த நபர் மீது 1971-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம் , 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம், 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset