நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்துமதச் சின்னத்தை அவமதித்தது மிகையான செயல்: பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்

ஷா ஆலம்: 

இந்துமதச் சின்னத்தை அவமதித்ததாக கூறப்படும் ஒரு நபரின் செயலைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் குர்ஆனை அவமதித்த சம்பவத்தையும் அவர் கடுமையாக கண்டித்தது போலவே, இந்த மிகையான செயலும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும் என்றார் அவர்.

“பல இனங்களும், மதங்களும் கொண்ட சமூகத்தில், மக்களிடையேயான ஒற்றுமை மிகவும் முக்கியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

“இன, மத வாதங்களை ஏற்படுத்தக்கூடிய எந்த செயல்களும் தவிர்க்கப்பட வேண்டும். எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல், மதத்தை அவமதிக்கும் அல்லது தூண்டுதல் ஏற்படுத்தும் செயல்களுக்கு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“நிலப் பயன்பாடு, விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் தொடர்பான பிரச்சினைகள் எந்த வகையிலும் இத்தகைய செயல்களை நியாயப்படுத்தாது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ‘திரிசூலம்’ எனப்படும் இந்துமதச் சின்னத்தை ஒரு நபர் அவமதித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி இந்துமதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும் அபாயம் இருப்பதாக டிஏபி தேசிய துணைத் தலைவருமான ஷாரெட்ஸான் எச்சரித்துள்ளார்.

“இல்லையெனில், அதிகாரிகளின் மீது மக்களின் நம்பிக்கை குறையும்; சிலர் தாங்களே நடவடிக்கை எடுக்கவும் முயற்சிக்கலாம்.

“சில தரப்புகளின் செயல்களால் நாடு கலவரத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பதே எங்களின் விருப்பம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் துறை (மத விவகாரங்கள்), இளைஞர், விளையாட்டு அமைச்சகம், தேசிய ஒற்றுமை அமைச்சகம் ஒன்றிணைந்து பல இனங்களும் மதங்களும் சேர்ந்த இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளை அதிகரிக்கும் திட்டங்களை  உருவாக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

“சமீபத்தில் உருவான பதற்றத்தைக் குறைப்பதற்காக மத பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ஒரு சந்திப்பு நடத்தப்பட வேண்டும் என்ற என் அழைப்பையும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

“கோபமும் வெறுப்பும் இந்த நாட்டை எரிய விடக்கூடாது. இது நம்முடைய ஒட்டுமொத்த பொறுப்பு,” என்றும் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset