நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன, மத உணர்வுகளைத் தூண்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: யுனேஸ்வரன்

கோலாலம்பூர்:

சமூக ஊடகங்கள், பொது இடங்களில் இன, மத உணர்வுகளைத் தூண்டும் நடவடிக்கைகள்  அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது.

அவை நாட்டின் ஒற்றுமைக்கும் சமூக அமைதிக்கும் பாதகம் விளைவிக்க கூடும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தூண்டுதல் கருத்துகள் அல்லது உள்ளடக்கங்கள் மூலம் பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக போலிஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீங்கிழைக்கும் நோக்கத்துடன் மக்களைப் பிரிக்க முயலும் எந்தவித தூண்டுதல்களையும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது.

அதோடு நாட்டின் ஒற்றுமையை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

மேலும், சமூக ஒற்றுமையைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்ட்த்துறைத் தலைவர் முன்வர வேண்டும்.

1948-ஆம் ஆண்டு தூண்டுதல் சட்டம், குற்றச் சட்டம் பிரிவு 298ஏ, 1998 ஆம் ஆண்டின் தொடர்பு, பல்லூடக சட்டம் பிரிவு 233, 2012 ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் (சொஸ்மா), 1959 ஆம் ஆண்டின் குற்றத் தடுப்பு சட்டம் (போகா) உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சட்டங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்கும் பணியில் மலேசிய பல்லூடக ஆணையம் மேலும் தீவிரமாகவும் முனைப்புடனும் செயல்பட வேண்டும் என்றும், வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தாமதமாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இன அல்லது மத உணர்வுகளைத் தூண்டி நாட்டின் அமைதியைப் பாதிக்க முயலும் தரப்பினர்கள்,  அந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கும் சமூக ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையில், இன மற்றும் மத உணர்வுகள் தொடர்பான சிக்கல்களை முறையாகக் கையாள்வதற்காக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக இன்று மேலவையில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

அத்துடன், சமூகத்தில் எழும் உணர்வுப்பூர்வமான சிக்கல்களை முறையாக கண்காணிக்க சமூக உணர்வுப்பூர்வ சிக்கல்கள் ஆய்வு மையம் என்ற தேசிய அளவிலான செயல்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மையம் இ-செபாக்காட், ராக்கான் , தேசிய போலீஸ் படை மற்றும் தேசிய தொடர்பு பல்லூட ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தரவுகளை ஒருங்கிணைத்து, சமூகத்தில் உருவாகும் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து அரசாங்கம் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உதவும் என அவர் கூறினார்.

நாட்டின் ஒற்றுமை என்பது அனைவரின் பொறுப்பு. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பையும் பிளவையும் பரப்புவதற்கு இடமில்லை, என யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset