நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.7 பில்லியன் ரிங்கிட் ஓய்வூதிய சரிசெய்தல் வழக்கில் அரசு வெற்றி 

புத்ராஜாயா: 

முன்னதாக உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த, 2016 சேவை சுற்றறிக்கையின் அடிப்படையில் முன்னாள் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தைச் சரிசெய்ய வேண்டும் என்ற தீர்ப்பை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதன் மூலம், அரை மில்லியனுக்கும் அதிகமான ஓய்வுபெற்றவர்களுக்கு மொத்தம் 1.7 பில்லியன் ரிங்கிட் பாக்கித் தொகையை அரசு செலுத்த வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டது.

நீதிபதி அஸ்ஹரி கமால் ரம்லி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஒருமித்த தீர்ப்பில் இந்த விவகாரம் 2022ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆகையால், அமினா அஹம்மத்துடன் மற்ற 56 ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த நீதித்துறை மறுஆய்வு மனு ஏற்கனவே தீர்க்கப்பட்ட வழக்காகும் என்றும், அது நீதிமன்ற செயல்முறையின் தவறான பயன்படுத்தல் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

தொடர்ந்து, நீதிபதி லிம் சோங் ஃபோங் தலைமையிலான அமர்வில் இன்றைய தீர்ப்பு இந்த வழக்கில் உள்ள 57 பதிலளிப்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் விளக்கினார்.

2022ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பில், 1980ஆம் ஆண்டின் ஓய்வூதிய சரிசெய்தல் சட்டத்தில் 2013ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த திருத்தத்தின் படி ஓய்வுபெற்றவர்களுக்கு ஆண்டுதோறும் நிலையான இரண்டு சதவீத உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த 2013 திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அது அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்களைப் பாதகமான நிலையில் வைத்ததாகவும், மலேசிய கூட்டாட்சி அரசியலமைப்பின் 147ஆம் பிரிவுடன் முரணாகும் என்றும் நீதிமன்றம் தீர்மானித்தது.

அதனைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரியான அமினா அஹம்மத்துடன் மற்ற பதிலளிப்பாளர்கள், 2013க்கு முன் இருந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முறையின் அடிப்படையில் அவர்களின் ஓய்வூதியத்தைச் சரிசெய்ய அரசு கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர்.

2013க்கு முன் இருந்த அந்த முறையின் படி, அரசு பணியில் உள்ள அதிகாரிகளின் சம்பள மாற்றத்திற்கேற்ப ஓய்வூதியமும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

2023 ஜனவரியில் உயர்நீதிமன்றம் பதிலளிப்பாளர்களின் மனுவை ஏற்றுக்கொண்டது. இதனால் தற்போதைய மேல்முறையீட்டு வழக்கு தொடங்கப்பட்டது.

இருப்பினும் அந்த உத்தரவு மேல்முறையீட்டு தீர்ப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஏனெனில் சேவை சுற்றறிக்கை PP 1/2016 என்பது பொது சேவைத் திட்டத்தில் ஒரு முன்னேற்றம் மட்டுமே, சம்பள மதிப்பாய்வு அல்ல என்பதை கருத்தில் கொண்டு முந்தைய சமர்ப்பிப்புகளில், மூத்த கூட்டாட்சி வழக்கறிஞர் அஹ்ம்மத் ஹனிர் ஹம்பலி பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கம், ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய மாற்றங்களைப் பெற உரிமை இல்லை என்று வாதிட்டார்.

இன்றைய தீர்ப்பில், மேல்முறையீட்டு நீதிமன்றம் அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டது. மேலும், அமினா அஹம்மத் 2013 திருத்தத்தால் தமக்கு ஏற்பட்ட இழப்பை நிரூபிக்கத் தவறியதாகவும், அதற்கு முன்பு அந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த தீர்ப்பின் மூலம், ஓய்வூதிய சரிசெய்தலைச் செயல்படுத்த அரசு இனி கட்டாயப்படுத்தப்படாது.

பதிலளிப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் பால்ஜித் சிங் சிது, தனது சக வழக்கறிஞர் குர்ப்ரீத் கௌர் பண்ணூ உடன் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மலேசிய கூட்டாட்சி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோர உத்தரவு பெற்றதாக தெரிவித்தார்.

 கூட்டாட்சி வழக்கறிஞர் சலாஹுடின் அலி அரசின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset