செய்திகள் மலேசியா
இனவாதத்தை தூண்ட பணம் கொடுக்கப்படுகிறதா?; சட்டத்தோடு மோதினால் அரசு அமைதியாக இருக்காது: டத்தோஸ்ரீ ரமணன் எச்சரிக்கை
புத்ராஜெயா:
நாட்டில் இனவாதத்தை தூண்ட பணம் கொடுக்கப்படுகிறது என்ற சந்தேகம் எனக்குள் எழுந்துள்ளது.
இனி சட்டத்தோடு மோதினால் அரசு அமைதியாக இருக்காது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் எச்சரித்தார்.
மலேசியா என்பது மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபான் மற்றும் கடசான் எனப் பல்வேறு இனங்களைக் கொண்ட ஒரு நாடாகும்.
மக்கள் இனவாதம், தீவிரவாதப் போக்குடைய கருத்துகளால் திசைதிருப்பப்படுவது முறையற்றது.
இன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான அறிக்கைகள், பதிவுகள் மற்றும் கருத்துகள் சமீபகாலமாக அடிக்கடி பரப்பப்படுவதைக் காண முடிகிறது.
இது மக்களிடையே நிலவும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
மலேசியா மடாணி அரசாங்கத்தின் சாதனைகளுக்கு எதிராகப் பேசுவதற்குப் பெரிய அளவிலானப் பிரச்சினைகள் ஏதும் இல்லாத நிலையில், ஒரு சில தரப்பினர் வெகுமதிகளால் தூண்டப்பட்டு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கின்றனர்.
குறுகிய இன உணர்வுகளைத் தூண்டுவதன் மூலமும், வெறுப்புணர்வைப் பரப்புவதன் மூலமும் அவர்கள் தங்களின் சுயநலத் திட்டங்களை முன்னெடுக்க முற்படுவது தெளிவாகத் தெரிகிறது.
ஒரு சிறிய குழுவினரின் இத்தகைய பொறுப்பற்றச் செயல்கள், 33 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களின் எதிர்காலத்தைப் பணயம் வைப்பதாக அமைந்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
தங்கள் சுயநலத்திற்காக, நீண்டகாலமாக மக்களால் கட்டியெழுப்பப்பட்ட நல்லிணக்கத்தை அவர்கள் அரசியல் பகடைக்காயாக மாற்ற முயல்கின்றனர்.
கடந்த பல தசாப்தங்களாக, பின்னணி வேறுபாடுகள் அமைதியான வாழ்விற்கும் பரஸ்பர மரியாதைக்கும் தடையாக இல்லை என்பதை மலேசியர்கள் நிரூபித்துள்ளனர்.
இதுவே நாடு தொடர்ந்து வளர்ச்சியடையவும் முன்னேறவும் வழிவகுத்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான இன்றைய மடானி அரசாங்கத்தின் வெற்றிக்கு, நிலையானக் கொள்கைகள், துணிச்சலான சீர்திருத்தங்கள், தலைமைத்துவத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையுமே காரணமாகும்.
உள்நாட்டில், தரமான முதலீடுகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மூலம் பொருளாதாரம் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
அதே வேளையில், மலேசியாவின் சர்வதேச உறவுகள் வலுவடைந்து வருவதால், மூலோபாய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் பெருகி, நாட்டின் மீது உலகளாவிய நம்பிக்கை அதிகரித்துள்ளது.
மலேசியா 2025-ஆம் ஆண்டில் 426.7 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 11 விழுக்காடு அதிகமாகும். இதன் மூலம் 8,390 திட்டங்கள் ஈர்க்கப்பட்டு, 2,44,902 தரமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சாதனைகள் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல, அவை மக்களின் அன்றாட வாழ்வில் உண்மையான நன்மைகளாகப் பிரதிபலிக்கின்றன.
குடும்ப நலன், பொருளாதார வாய்ப்புகள் மட்டுமின்றி, வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் செயல்படுத்தும் ரஹ்மா ரொக்க உதவி, அடிப்படை ரஹ்மா உதவி, ஒரு லிட்டர் 1.99 ரிங்கிட் என்ற குறைந்த விலையிலான பூடி95 பெட்ரோல் மானிய சீரமைப்பு போன்ற திட்டங்கள் மூலம் தகுதியுள்ள அனைத்து மக்களும் பின்னணி பாரபட்சமின்றி நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர்.
நமது கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம், நாட்டின் தனித்துவமான வரலாறு மற்றும் சமூகக் கட்டமைப்பை அங்கீகரிப்பதோடு, அனைத்து குடிமக்களின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
அரசியலமைப்பின் மேலாதிக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சியே நாடு அமைதியாகவும், இணக்கமாகவும், நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. எனவே, கருத்துச் சுதந்திரம் என்பது மக்களைத் தூண்டிவிடுவதற்கோ அல்லது பிளவுபடுத்துவதற்கோ தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
மக்களின் அமைதியையும் நலனையும் சீர்குலைக்க முயலும் எவர் மீதும், குறிப்பாக மன்னராட்சி, இனம், சமயம் தொடர்பான 3ஆர் விவகாரங்களைக் கையில் எடுப்பவர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 6:21 pm
மாடானி அரசு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகளை விரைவில் தெரிவிக்கும்
March 9, 2026, 6:19 pm
சபாவில் நாளை முதல் தொடர்ச்சியான மழை பெய்யும்
March 9, 2026, 6:18 pm
மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது: MKN
March 9, 2026, 5:30 pm
மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்
March 9, 2026, 5:27 pm
கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்
March 9, 2026, 5:26 pm
லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது
March 9, 2026, 5:24 pm
