செய்திகள் உலகம்
விவாகரத்து செய்யாமலேயே மறுமணம்? போலி ஆவணங்களுடன் மலேசியப் பெண்கள் முயற்சி
நராதிவாட்:
தெற்கு தாய்லாந்தில் இரண்டாவது திருமணம் செய்யும் நோக்கில் மலேசியப் பெண்கள் குறிப்பாக கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தாய்லாந்து இஸ்லாமிய சமய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது திருமணத்திற்கு விண்ணப்பிக்கும் போது தங்களது திருமண நிலை குறித்து தவறான தகவல்களை வழங்கும் பெண்கள் தொடர்பான வழக்குகளை அதிகாரிகள் மிகவும் தீவிரமாகக் கவனித்து வருகின்றனர் என்று நாராதிவாட் இஸ்லாமிய சமயப் பேரவையின் துணைத் தலைவர் அப்துல் அஜீஸ் சே மாமத் தெரிவித்துள்ளார்.
அவர்களில் சிலர் முதல் கணவருடன் விவாகரத்து செய்யப்பட்டதாகக் கூறி ஆவணங்களில் கையெழுத்திடத் தயார் ஆகின்றனர். இருப்பினும் அவர்களால் அதிகாரப்பூர்வ விவாகரத்து சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.
“சமீப காலங்களில் நராதிவாட் இஸ்லாமிய மத பேரவை மலேசிய தம்பதிகள் திருமணம் நடத்துவதற்காக அதிகம் வரும் இடமாக மாறியுள்ளது. சில மலேசிய பெண்கள் முதல் கணவருடன் விவாகரத்து உறுதிப்படுத்தப்படாத நிலையில் இங்கு வந்து இரண்டாவது திருமணம் செய்ய முயற்சிப்பது அதிகரித்து வருகிறது.
“அவர்களில் பெரும்பாலானவர்கள் மலேசிய ஆண்களைத் திருமணம் செய்கின்றனர். சிலர் வெளிநாட்டு ஆண்களையும் திருமணம் செய்கின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பெண்களின் முதல் கணவர்கள் முன்வந்து அவர்கள் இன்னும் விவாகரத்து செய்யப்படவில்லை என்று கூறும்போது பிரச்சனை உருவாகிறது என்று அவர் விளக்கினார்.
சில பெண்கள் தங்களது விவாகரத்து சான்றிதழ் இன்னும் தயாராகவில்லை என கூறி, முதலில் திருமணத்தை நடத்திவிடுமாறு மத பேரவை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“அந்தச் சூழ்நிலையில் அவர்களிடம் சத்தியப்பிரமாணக் கடிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்கிறோம். இருப்பினும் சிலர் திருமணம் நடைபெற்ற பிறகு திருமணச் சான்றிதழைப் பெற மீண்டும் வருவதில்லை,” என்றார் அவர்.
இந்தப் பிரச்சினை தொடர்ந்து அதிகரிக்காமல் தடுக்க மலேசிய பெண்கள் இரண்டாவது திருமணம் செய்ய கடுமையான புதிய விதிகளை அமல்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
புதிய விதிமுறைகளின்படி, முதல் கணவருடன் விவாகரத்து உறுதி செய்யப்படாத மலேசிய பெண்கள் புதிய திருமணம் நடைபெறுவதற்கு முன் முதல் கணவருடன் நடந்த திருமணத்தின் அசல் திருமணச் சான்றிதழும், விவாகரத்து அசல் சான்றிதழும் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் கணவரிடமிருந்து விவாகரத்து சான்றிதழைப் பெற முடியாத சில மலேசிய பெண்கள் தகுதி இல்லாத நபர்கள் அல்லது திருமண மோசடி கும்பல்களின் உதவியை நாடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
“சமீப காலங்களில் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத திருமணங்களை ஏற்பாடு செய்யும் கும்பல்கள் மீண்டும் மறைமுகமாக செயல்படத் தொடங்கியுள்ளன,” என்று அவர் கூறினார்.
இதனால், மலேசிய தம்பதிகள் தகுதி இல்லாத நபர்கள் அல்லது போலி மத குருக்கள் மூலம் திருமணம் செய்ய வேண்டாம் என்று அப்துல் அஜீஸ் எச்சரிக்கை விடுத்தார்.
நராதிவாட் இஸ்லாமிய மத பேரவை அதிகாரப்பூர்வமாக 30 தகுதி பெற்ற குழு உறுப்பினர்களைத் திருமண நிகழ்வுகளை நடத்த நியமித்துள்ளது. அவர்கள் மலேசிய தம்பதிகளுக்கு மட்டுமல்லாமல் தெற்கு தாய்லாந்து தம்பதிகளுக்கும் சேவை வழங்குகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து மலேசியா, தாய்லாந்து சமய அதிகாரிகள் இடையே பல சந்திப்புகள் நடைபெறவுள்ளன என்றும், இதுகுறித்து இன்னொரு கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 4:23 pm
உலக எரிசக்தி நெருக்கடி: நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூட வங்கதேச அரசு உத்தரவு
March 9, 2026, 11:22 am
மொஜ்தபா கமெனேயின் தலைமையில் இஸ்ரேல் மீது ஈரானின் முதல் ஏவுகணை தாக்குதல்
March 9, 2026, 11:02 am
வீடு சுத்தம் செய்ய சென்றபோது அதிர்ச்சி: தாயின் சடலம் கண்டெடுப்பு
March 9, 2026, 10:16 am
“ஈரானின் புதிய உயர்தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க மாட்டார்”: டிரம்ப் சாடல்
March 8, 2026, 10:11 pm
வேற்றுமையில் ஒற்றுமை: சிங்கப்பூரில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்த அழகிய நோன்புத் திறப்பு
March 8, 2026, 6:58 pm
இந்தோனேசியாவின் பல பகுதிகளில் வெள்ளப்பேரிடர்: 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
March 8, 2026, 5:12 pm
அஞ்சல் சேவையைப் பயன்படுத்திய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு
March 7, 2026, 4:40 pm
