செய்திகள் மலேசியா
அரசு SEGiM அமைப்பை உருவாக்க ஒப்புதல்: துணைப் பிரதமர்
மலாக்கா:
நாட்டில் உள்ள கிக் தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பை ஒழுங்குபடுத்த மலேசிய கிக் பொருளாதார ஆணையம் (SEGiM) அமைப்பை உருவாக்க அமைச்சரவை அடிப்படையாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட கிக் தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்துவதற்கும், கிக் வேலைவாய்ப்பு சூழலை மேலும் ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் அமைப்பதற்கும் இந்த ஆணையம் உருவாக்கப்படவுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹம்மத் ஸாஹித் ஹமிடி தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் சுமார் 1.2 மில்லியன் கிக் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் உணவு விநியோகம் மற்றும் 'e-hailing' போன்ற பல்வேறு சேவை துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் இன்னும் சமூக பாதுகாப்பு அமைப்பு (PERKESO), ஊழியர் சேமிப்பு நிதி (KWSP) ஆகியவற்றில் பங்களிப்பு செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார்.
“இதனால், சமூக பாதுகாப்பு பங்களிப்பை விரிவாக நடைமுறைப்படுத்த சிறந்த முறையை அரசு தற்போது ஆய்வு செய்து வருகிறது. கிக் தொழிலாளர்களே மட்டும் அல்லாமல், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சேவை தளங்களும் இதில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படலாம்.
“சாதாரண வேலைகளில் இருப்பது போல் கிக் தொழிலாளர்களுக்கு நிரந்தர முதலாளி இல்லை. அவர்கள் வேலைவாய்ப்பை வழங்கும் சேவை தளங்களுடன் மட்டுமே தொடர்பு கொண்டுள்ளனர்.
“அதனால், இந்த ஆணையம் தேவையான வழிகாட்டுதல்களையும் நடைமுறைகளையும் நிர்ணயித்து கிக் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கும்,” என்று அவர் இன்று இங்கு புகிட் பாலா இஸ்லாமிய மையத் திடலில் நடைபெற்ற 'Majlis Santunan Kasih Ramadan dan Iftar Jamaie Mega' நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கூறினார்.
சமூக பாதுகாப்பு மட்டுமல்லாமல், தற்போது சேவை, பயண தூரத்தைப் பொறுத்து மாறுபடும் கிக் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதம் பற்றியும் இந்த ஆணையம் ஆய்வு செய்யும்.
அதன் மூலம், கிக் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்ய நியாயமான கட்டண விகிதத்தை நிர்ணயிக்க அரசு சிறந்த தீர்வைக் கண்டுபிடிக்க விரும்புகிறது என்றார் அவர்.
தொடர்ந்து, திறன் மேம்பாட்டு திட்டங்கள், மறுபயிற்சி மூலம் கிக் தொழிலாளர்களின் திறன்களை உயர்த்துவதற்கும் கவனம் செலுத்தப்படுவதாக அவர் கூறினார்.
“தொழில்நுட்ப, தொழிற்பயிற்சி கல்வி (TVET) அடிப்படையிலான பயிற்சிகள் வலுப்படுத்தப்படும். இது அவர்களுக்கு புதிய திறன்களைப் பெற உதவும்.
“இந்த முயற்சி கிக் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் நிரந்தர வேலைவாய்ப்புகளுக்கு மாறவும், தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கவும் வாய்ப்பளிக்கும்.
“SEGiM அமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் சமூக பாதுகாப்பு வலுப்பெற்று, நாட்டின் மில்லியன் கணக்கான கிக் தொழிலாளர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் என்று அரசு நம்புகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 7, 2026, 12:37 pm
சபிண்டோ ரமலான் பசாரில் ஏற்பட்ட மோதல்: 8 பேர் கைது
March 7, 2026, 11:56 am
புத்ராஜெயா ஏரியில் சுற்றுலா படகு தீப்பற்றியது
March 7, 2026, 11:05 am
கார் ஓட்டுநர் தூங்கியதால் சோகமாக முடிந்த பயணம்
March 7, 2026, 10:59 am
கத்தாரில் உள்ள 323 மலேசியர்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள்
March 7, 2026, 10:52 am
வட்டார முன்னேற்றங்கள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் டத்தோஸ்ரீ அன்வார் விவாதித்தார்
March 7, 2026, 10:40 am
