நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானு, கிளந்தான் மாநிலங்களில் RM7.7 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வனப் பொருட்கள் பறிமுதல்: உதவி ஆணையர் அஹமத் ரட்ஸி ஹுசைன் 

கோத்தா பாரு:

பொது செயல்பாட்டுப் படையின் (GOF) தென்கிழக்கு படைப்பிரிவு இந்த மாதம் முழுவதும் திரெங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சோதனைகளில் மரக்கட்டைகள், வட்ட மரங்கள், இயந்திரங்கள் உட்பட RM7.7 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வன வளங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

'Ops Bersepadu Khazanah (OBK)', 'Ops Taring Wawasan Kelantan (OTWK)' நடவடிக்கைகள் மூலம் 20 நபர்கள் கைது செய்யப்பட்டதாக மூத்த உதவி ஆணையர் அஹமத் ரட்ஸி ஹுசைன்  தெரிவித்தார்.

முதற்க்கட்ட சோதனையில், கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இரவு 8.30 மணிகயளவில் குவா மூசாங் அருகிலுள்ள செராசா, பாலோ பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரியை PGA பெட்டாலியன் 8 (PGA8) தடுத்து நிறுத்தியது.

“அந்த லாரி ஓட்டுநர் வனத்துறையிலிருந்து பெறப்பட்ட சட்டபூர்வமான மர இடமாற்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினார். இதனால்,  ஒரு லாரியும், ‘மெராந்தி’ வகையைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஆறு மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

“48 வயதுடைய ஆடவர் ஒருவர் தேசிய வனசட்டம் 1984 (சட்டம் 313) பிரிவு 15ன் கீழ் கைது செய்யப்பட்டார்,” என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அதே தோட்டப் பகுதியில் இரவு 10.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையில், உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டி, கடத்தி, விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

அதில், ஒரு லாரி, ஒரு அகழ் தோண்டு இயந்திரம் (excavator), ஒரு புல்டோசர் (bulldozer), ஒரு சங்கிலி அரிவாள் (chainsaw), ஏழு மரக்கட்டைகள் உட்பட மொத்தம் RM1,455,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 PGA 9, சிறப்பு பிரிவு அதிகாரிகள், திரெங்கானு வருவாய் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி காலை 9.20 மணியளவில் டுங்கூன் மாவட்டத்தின் ஜெரங்காவு முகீம் பகுதியில் உள்ள ஒரு மர ஆலையில் சோதனை நடத்தினர்.

“அந்த நிறுவனம் முறையான செயல்பாட்டு அனுமதியை வழங்கத் தவறியது. இதனால், 40 முதல் 60 வயதுக்குட்பட்ட ஏழு நபர்கள் தேசிய வனச் சட்டம் 1984 (சட்டம் 313)ன் கீழ் கைது செய்யப்பட்டனர்.

“பல்வேறு இயந்திரங்கள், அரிவாள் கூர்மையாக்கும் கருவிகள், பல அளவிலான வட்ட மரங்கள், ஒரு லாரி உட்பட RM304,470 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன,” என்றார் அவர்.

மேலும், இரண்டு மர ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரக்கணக்கான வட்ட மரங்கள், தயாரிக்கப்பட்ட மரப் பொருட்கள், பல்வேறு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

“இவற்றில், இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 11 ஆண்கள், தேசிய வனச் சட்டம் 1984 (சட்டம் 313) பிரிவு 84ன் கீழ் கைது செய்யப்பட்டனர்,” என்றார்.

மலேசியாவின் வன வளங்களை பொறுப்பற்ற தரப்புகள் சுரண்டுவதிலிருந்து பாதுகாப்பதில், குறிப்பாக PGA உட்பட தேசிய காவல் படையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நிரூபிப்பதாக அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset