நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிவாசல் உண்டியலைத் திருடிய 17 வயது இளைஞர் உட்பட 4 பேர் கைது

ஷா ஆலாம்: 

இங்குள்ள செக்ஷன் 7-ல் அமைந்துள்ள கிரிஸ்டல் பள்ளிவாசல் உண்டியலைத் திருடிய சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரைப் போலீஸார் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை ஷா ஆலாம் மாவட்ட காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வு பிரிவு (D4, D7), ஸ்ரீ மூடா காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு இணைந்து மேற்கொண்டதாகச் சிலாங்கூர் மாநில காவல் துறை தலைவர் டத்தோ ஷசேலி கஹார் தெரிவித்தார்.

“பிப்ரவரி 22, 24 தேதிகளில், நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, செக்ஷன் 13 (ஷா ஆலாம்), ஸ்கை ஸ்யூட் KLCC முன்பு, ஆர்டே சுபாங் வெஸ்ட், தஞ்சோங் அடுக்குமாடி குடியிருப்பு (ஸ்ரீ கெம்பாங்கான்) ஆகிய இடங்களில் சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டது.

“இந்த நடவடிக்கையில், 17 முதல் 26 வயதுக்கிடையில் உள்ள நான்கு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அனைவருக்கும் முன்பு குற்றம், போதைப்பொருள் தொடர்பான பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் 'amphetamine', 'methamphetamine'  வகையான போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது,” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது, போலீஸார் ஒரு தொயோத்தா அவான்ஸா ரக கார், நான்கு கைபேசிகளுடன் RM200 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

மசூதி, தொழுகை மண்டப நிர்வாகிகள் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், காணிக்கை பெட்டிகளை அடிக்கடி காலி செய்ய வேண்டும் என்றும் ஷசேலி அறிவுறுத்தினார்.

“வழிபாட்டுத் தலங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருப்பதைப் பற்றிய தகவல்களைப் பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்,” என்றார் அவர்.

முன்னதாக, பிப்ரவரி 22 அன்று நடந்த இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரைப் போலீஸார் கண்டறிந்ததாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்தச் சம்பவம் அதிகாலை 4 மணியளவில் நடந்ததாகவும், வெள்ளி நிற தொயோத்தா அவான்ஸா ரக காரில் வந்த உள்ளூர் நபர்கள் இதை செய்ததாகவும் ஷா ஆலாம் மாவட்ட காவல் துறை தலைவர், உதவி ஆணையர் ராம்சே எம்போல் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மசூதி நிர்வாகம் 'Threads' சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, இது சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

நேற்று அந்தக் காணிக்கை பெட்டி செக்ஷன் 13 பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset