நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

கோத்தா கினபாலு: 

சபா மாநில அரசின் ஏற்பாட்டில் சபா சர்வதேச மாநாட்டு மையத்தில் (SICC) இன்று நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பல்வேறு இன, சமூகங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் சபா மாநில ஆளுநர் துன் மூசா அமானும் அவரது மனைவி தோ புவான் ஃபரிதா துசின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நூூருடன் அவரது மனைவி டத்தின் ஸ்ரீ ஜுலியா சலாக், ஏற்பாட்டுக் குழுத் தலைவரானச் சுற்றுலா, கலாசாரம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டத்தோ ஜாஃப்ரி அரிஃபின் உட்பட மற்ற அமைச்சர்களும் சமூகத் தலைவர்களும் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பொதுமக்கள் காலை 8 மணியிலிருந்தே SICC வளாகத்தில் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் வாழும் பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையை வெளிப்படுத்தும் வருடாந்திர விழாவாக இது அமைந்துள்ளது.

கோத்தா கினபாலுவைச் சுற்றியுள்ள 15 முன்னணி உணவகங்களிலிருந்து சீன கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு உணவுகள் பறிமாறப்பட்டன.

காலை 11 மணியளவில் துன் மூசா, அவரது மனைவியின் வருகையின்போது, சிங்க நடனங்கள் அரங்கேறின. அதன் பின்னர், புத்தாண்டின் நலனையும் செழிப்பையும் குறிக்கும் வகையில் டிரம் அடித்தல், ‘யீ சாங்’ கலக்குதல் ஆகிய சடங்குகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சபா மக்களின் பாரம்பரியம், அடையாளத்தை வெளிப்படுத்தும் பல்வேறு கலாச்சார, மேடை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

சபா மாநில அரசின் இந்தச் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல விழா பல்வேறு கலாசாரங்களைக் கொண்டாடும் மேடையாக மட்டுமல்லாமல் மக்களிடையே ஒற்றுமையையும் அமைதியையும் பேணுவதற்கான அரசின் தொடர்ந்த அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset