நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆபாச குறுஞ்செய்தி வழக்கு: முன்னாள் பாதுகாப்பு காவலருக்கு RM30,000 அபராதம்

ஈப்போ:

 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட முன்னாள் பாதுகாப்பு காவலருக்கு, அமர்வு நீதிமன்றம் இன்று RM30,000 அபராதம் விதித்துள்ளது.

நீதிபதி ஐனுல் ஷாரின் முஹ்ம்மது, 42 வயதுடைய சயீத் டானியான் சயீத் முஸ்தஃபா பாஸ்ரிக்கு இந்தத் தண்டனையை விதித்துள்ளார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால், ஒவ்வொரு குற்றத்திற்கும் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

முதல் இரண்டு குற்றச்சாட்டுகளின்படி, 2024 டிசம்பர் 13 அன்று காலை 7.45, 7.50 மணியளவில், பத்து காஜா அருகிலுள்ள ஜாலான் பெம்பான், பெம்பான் பகுதியில், குறுஞ்செயலியைப் பயன்படுத்தி பெண் ஒருவரை தொந்தரவு செய்யும் நோக்குடன் ஆபாச செய்திகளை அனுப்பியதாக சயீத் டானியான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மூன்றாவது குற்றச்சாட்டின் படி, 2024 டிசம்பர் 14 அன்று அதிகாலை 3.34 மணியளவில், பத்து காஜா அருகிலுள்ள தாமான் பெம்பான் பெர்மாய் பகுதியில், இதேபோன்ற குற்றத்தை அவர் செய்ததாகக் கூறப்பட்டது.

இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் (சட்டம் 588) பிரிவு 233(1)(a) இன் கீழ் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM50,000 அபராதம், ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் குற்றம் தொடர்ந்தால், ஒவ்வொரு முறைக்கும் RM1,000 கூடுதல் அபராதம் விதிக்கப்படலாம்.

வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜரான சயீத் டானியான், மாற்றுத் திறனாளி (OKU) ஒருவரையும் உட்பட மூன்று குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய நிலை உள்ளதால், குறைந்தபட்ச அபராதம் விதிக்குமாறு கோரினார்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் மரியாதைக்கும் மனநிலைக்கும் கடுமையானப் பாதிப்பை ஏற்படுத்திய மிக மோசமான செய்திகளை அனுப்பியதால், சம்பந்தப்பட்ட நபருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (MCMC) சார்பில் துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஃபாத்லி அப்துல் வஹாப்பும் வழக்குத் தொடரும் அதிகாரி நட்சீரா இட்ரிஸும் வலியுறுத்தியுள்ளனர்.

இறுதியாக, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் RM10,000 அபராதமும், அதை செலுத்தத் தவறினால் ஐந்து மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குற்றவாளிக்குச் சொந்தமான ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பதற்காக  MCMC-யிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset