நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஜாங் தாமான் கோப்பராசி கியூபாக்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கான சாலை 3.3 மில்லியன் ரிங்கிட் செலவில் அமைக்கப்படும்; பிஜேஎஸ் 4 வழிபாட்டுத் தலங்களுக்கு மாற்று நிலம்: பாப்பாராயுடு

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநிலத்தில் சர்ச்சையாக இருந்த சீக்கியர் ஆலயம் உட்பட 4 ஆலயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.

தாமான் கோப்பராசி கியூபாக்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நுழைவுப்பாதை தொடர்பான சிக்கல், 200-ஆம் ஆண்டிலிருந்து நீண்ட காலமாக நீடித்து வந்தது. 

1988ஆம் ஆண்டிலேயே அந்த நிலம் ஆலயப் பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், முறையான நுழைவுப்பாதை இல்லாததாலும், உரிய அனுமதி விதிமுறைகளைப் பின்பற்றுவதில் ஏற்பட்ட சிக்கல்களாலும் கட்டுமானப் பணிகள் பலமுறை தாமதமடைந்தன.

அங்கீகரிக்கப்பட்ட திட்டமிடல் அனுமதியின்படி, ஆலய வளாகத்திற்கான நுழைவுப்பாதை சுங்கை லோங் சாலையிலிருந்து அமையும் சாலை வழியாக மட்டுமே அமைய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள குடியிருப்பு சாலைகளைப் பயன்படுத்துவதற்கோ அல்லது தற்காலிகச் சாலைகளை அமைப்பதற்கோ முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஏனெனில், அத்தகைய நடவடிக்கைகள் அப்பகுதி மக்களின் எதிர்ப்பைத் தூண்டுவதோடு, பாதுகாப்புச் சிக்கல்களையும் உருவாக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

இதற்கான இறுதித் தீர்வாக, சுங்கை லோங் சாலையிலிருந்து சுமார் 383 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு புதிய சாலையை அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவு 3.3 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

மேலும் தொடர் முரண்பாடுகளைத் தவிர்க்கவும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்யவும், இப்பகுதியின் வருங்கால மேம்பாட்டுப் பணிகளுக்குத் துணையாக அமையவும் இப்பரிந்துரையே மிகவும் பொருத்தமான தீர்வாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய நில உரிமையாளர்களை உள்ளடக்கிய அந்தப் பகுதியின் மேம்பாடு, இச்சாலை கட்டுமானச் செலவிற்கும் பங்களிப்பை வழங்கும். 

தாமான் டேசா பாரு, தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் குடியிருப்பாளர்கள், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்,  வருங்கால மேம்பாடுகள் என அனைத்துத் தரப்பினரின் இணக்கமான சூழலை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும் இது. 

மேலும், இந்தப் புதிய சாலை அப்பகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் வழிவகை செய்யும்.

இன்று காலை நடைபெற்ற மாநிலச் ஆட்சிக் குழு கூட்டத்தில், இந்தப் புதிய சாலை கட்டுமானத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதனை விரைவாகச் செயல்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது. 
அத்துடன், சாலை இருப்பு நிலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கவும், வருங்காலத்தில் இச்சாலையைப் பயன்படுத்தும் நில உரிமையாளர்கள் கட்டுமானச் செலவில் பங்களிப்பதற்கான முறையான வழிமுறைகளை வகுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சிலாங்கூர் மாநில அரசாங்கம் இப்பிரச்சினைக்கு ஒரு விரிவான, சமநிலையான மற்றும் இறுதியான தீர்வை எட்டியுள்ளதால், அனைத்துத் தரப்பினரும் இந்த விவகாரத்தை மீண்டும் கிளற வேண்டாம்.

தொடர்புடைய மற்றொரு நிகழ்வாக, பிஜேஎஸ் 4 பகுதியில் ஜாய்ஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ள இஸ்லாமிய மயான நிலத்தில், ஒப்பந்ததாரர்கள் தங்கள் பணிகளைத் தடையின்றித் தொடர, கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்பதை மாநில அரசாங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

குறிப்பிட்ட அந்த நிலத்தில் அமைந்திருந்த ஸ்ரீ மகா மாரியம்மன் டேசா பெராங்சாங், ஸ்ரீ கோட்டை மதுரை வீரன் தாமன் டேசா ரியா, பெட்டாலிங் டின் சீக்கியர் சங்கம் ஆகிய மூன்று வழிபாட்டுத் தலங்களுக்கு, அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட மாற்று நிலங்களுக்கு இடமாற்றம் செய்ய முன்வந்துள்ளன. 

மாநிலத்தின் இன நல்லிணக்கத்தைப் பேணும் உயரிய நோக்கில், இந்த மூன்று வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினரும் இடமாற்றத்திற்கு சம்மதம் என தெரிவித்துள்ளனர் என்பதைப் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் அறியத்தருகிறோம்.

இறுதியாக, இவ்விவகாரத்தை மிகுந்த கவனத்துடனும், நிபுணத்துவத்துடனும் விவேகத்துடனும் கையாண்டு, ஒரு சுமுகமான தீர்வைக்காண உதவிய மாநில மந்திரி புசாருக்கும் ஆட்சிக் குழு  உறுப்பினர்களுக்கும்  அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாப்பாராயுடு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset