நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பயணியிடம் பாலியல் தொல்லை புரிந்த ஈ ஹெய்லிங் ஓட்டுநரின் உரிமம் உடனடியாக ரத்து: அந்தோனி லோக்

புத்ராஜெயா:

ஜொகூரில் ஒரு பெண் பயணியைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் ஈ-ஹெய்லிங் ஓட்டுநரின் பொதுப் போக்குவரத்து சேவை உரிமத்தை (PSV) உடனடியாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சகம் (MOT), சாலை போக்குவரத்து துறைக்கு (JPJ) உத்தரவிட்டுள்ளது.

உரிமம் ரத்து செய்யப்பட்ட அந்த ஓட்டுநர் எந்த ஈ-ஹெய்லிங் தளத்திலும் இனி பணியாற்ற முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

“பயணிகளின் பாதுகாப்பிற்குக் களங்கம் ஏற்படுத்தும் எந்தவொரு நடத்தைக்கும் MOT எந்தவிதமான சகிப்புத்தன்மையும் காட்டாது. குற்றம் செய்தவருக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதற்காகப் பாதிக்கப்பட்டவருக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைத் திட்டங்களை முன்வைக்க, Grab உள்ளிட்ட அனைத்து ஈ-ஹெய்லிங் நிறுவனங்களையும் நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (APAD) மூலம் MOT அழைக்கவுள்ளதாக லோக் கூறினார்.

சமீபத்தில், ஜொகூர் பாருவில் ஒரு பெண் பயணியைப் பாலியல் தொல்லை செய்ததாகக் கூறப்படும் ஈ-ஹெய்லிங் ஓட்டுநரை காவல்துறை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருவதாக, சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவைத் தொடர்ந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அந்த வைரல் வீடியோ, பாதிக்கப்பட்ட பெண் பயணியால் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் ஓட்டுநரின் பின்னணி விவரங்களும் சமூக வலைதளங்களில் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset