நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாயைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர், சிலாங்கூர் மாநிலத்திற்குச் செல்லும் பேருந்தில் கைது

அலோர் ஸ்டார்:

 வங்கியின் செயல்பாட்டு நிர்வாகியாகப் பணியாற்றிய தனது தாயைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர், நேற்று இரவு சிலாங்கூர் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது  போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

52 வயதுடைய ஸஹ்ருல்லைல் பாசிர் என்ற பெண், தஞ்சோங் பெண்டஹாரா சாலையில் உள்ள தாமான் சுல்தான் அப்துல் ஹலிம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில், உடலில் மூன்று குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சந்தேக நபர், நேற்று இரவு 8.34 மணியளவில் கெடா மாநில காவல் துறை தலைமையகத்தின் குற்ற விசாரணைப் பிரிவும், கோத்தா செத்தார் மாவட்ட காவல் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார் என்று கோத்தா செத்தார் மாவட்ட காவல் துறை தலைவர் உதவி ஆணையர் சயீத் பஸ்ரி சயீத் அலி தெரிவித்தார்.

சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள், வடக்கு–தெற்கு விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 441.5 பகுதியில், தெற்குத் திசை நோக்கிச் சென்ற சுற்றுலா பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக மேலும் பேசிய அவர் கூறினார்.

“நேற்று இந்த நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த 52 வயதுடைய பெண் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“மேலும், சந்தேக நபர் மீது முன்பே ஒரு குற்றப் பதிவு இருந்தது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

“எனினும், அவர் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப நிலை சிறுநீர் பரிசோதனை முடிவுகள் போதைப்பொருள் பயன்பாடு இல்லை என்பதை காட்டுகின்றன,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டதையடுத்து சந்தேக நபர் அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார. அவரை இன்று முதல் பிப்ரவரி 9 வரை ஏழு நாட்கள் தடுப்புகாவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று சயீத் பாஸ்ரி கூறினார்.

இந்த உத்தரவை மாஜிஸ்திரேட் நூர் ஷிபா மொஹ்த் ஹம்சா பிறப்பித்தார். இந்த வழக்கு, குற்றச் சட்டம் பிரிவு 302ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, பிரம்படி விதிக்கப்படலாம்.

“இதனால், விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று மலேசிய அரச காவல் துறை (PDRM) பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

“தவறான அல்லது பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் விசாரிக்கப்பட்டு, தகுந்த தண்டனை வழங்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset