நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நகராட்சி தேர்தல் அச்சுறுத்தல் அல்ல, மக்களின் அதிகாரம்: அம்னோ இளைஞர் பிரிவின் எதிர்ப்புக்கு டாப்ஸி பதில்

கோலாலம்பூர்:

உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் (PBT) தேர்தலை மீண்டும் கொண்டு வருவது, ஆரோக்கியமான, வெளிப்படையான, மக்களை மையமாகக் கொண்ட நிர்வாக அமைப்பை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். இது சில தரப்புகள் கூறுவது போல நிர்வாகத்திற்கு அச்சுறுத்தலாக இல்லை என்று டாப்ஸி தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் மக்களுக்கு தங்கள் பகுதி தலைவர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இதன் மூலம் நகர நிர்வாகத்தின் பொறுப்புணர்வு அதிகரிக்கிறது என்று டாப்ஸி தேசிய துணைச் செயலாளர் எட்மண்ட் லிம் கூறியுள்ளார்.

மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் மக்களுக்கு நேரடியாகப் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மேலும் பேசிய அவர் தெரிவித்தார்.

“மேயர், நகராட்சி உறுப்பினர்கள் மக்களின் ஆதரவைச் சார்ந்திருந்தால், அவர்கள் உள்ளூர் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவார்கள். சமூகத்தின் உண்மையான தேவைகளை நன்றாகப் புரிந்து கொள்வார்கள்,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் அடிப்படை நிலை மக்களாட்சியை வலுப்படுத்தும் என்றும், மக்கள் நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபட வாய்ப்பு அளிக்கும் என்றும் அவர் கூறினார். இது குடிமக்கள் விழிப்புணர்வையும், தங்கள் நகரத்தின் மீது உரிமை உணர்வையும் வளர்க்கும் என்றார் அவர்.

“மேயர், நகராட்சி உறுப்பினர்களை நியமிக்கும் முறையில் மக்களுக்கு மீண்டும் தேர்வு செய்யும் அதிகாரத்தை வழங்குவது குறித்து இப்போது பரிபக்வமான விவாதம் நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

“மக்களிடமிருந்து நேரடியாக கிடைக்கும் அதிகாரம் காரணமாக, உள்ளாட்சி தலைவர்கள் முடிவெடுக்கும்போது அதிக கவனம் செலுத்துவார்கள்,” என்றார்.

முன்னதாக, கோலாலம்பூர் மேயர் தேர்தலை நடத்தும் திட்டத்தை தடுக்கப் போவதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மது அக்மல் சாலே கூறியிருந்தார். இது நகர மறுசீரமைப்புச்  சட்ட முன்மொழிவின் தொடர்ச்சி என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த எட்மண்ட் லிம், இந்த எதிர்ப்பு உண்மையான மதிப்பீட்டின் அடிப்படையில் இல்லாமல், அரசியல் நோக்கத்துடன் செய்யப்படுவதாகக் குறிப்பிடட்டுள்ளார்.

“மேயர், நகராட்சி உறுப்பினர் தேர்தல் என்பது வெறும் நிர்வாக முறை பற்றியது அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்களுக்காக ஆட்சி செய்ய   வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இது அமைகிறது.

“ஆனால், டிஏபி முன்வைக்கும் எந்த யோசனையையும் அதன் பயனை மதிப்பீடு செய்யாமல் மறுக்கும் PAS அணுகுமுறைக்கு டாக்டர் அக்மல் ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கிறார் போல தெரிகிறது,” என்றார் அவர்.

மேலும், கண்மூடித்தனமான எதிர்ப்பு, நகர நிர்வாகச் சீர்திருத்தம் குறித்து ஆரோக்கியமான விவாதங்களைத் தடுக்கிறது என்றும், இது மக்களின் நலனுக்கு பதிலாக குறுகிய அரசியல் லாபத்தையே முன்னிலைப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset