நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதக் கடத்தல் வலையில் சிக்கிய 57 சிறுவர்கள் உட்பட 138 பேர் மீட்பு: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட “ஓப் பின்டாஸ் காஸ்” சிறப்பு நடவடிக்கையின் மூலம் மனிதக் கடத்தல், கட்டாய தொழில்சுரண்டலுக்கு உள்ளான 138 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ குமார் கூறினார் 

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் D3 மனிதக் கடத்தல், குடியேற்றக் கடத்தல் தடுப்பு பிரிவு (ATIPSOM) இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை முன்னெடுத்து, செம்பனை தோட்டங்களிலும் ரப்பர் கையுறை உற்பத்தித் துறைகளிலும் நிலவும் அடிமைத்தன குற்றங்களை வெளிக்காட்டியுள்ளன.

டத்தோ எம். குமார் மேலும் கூறுகையில், 14 போலீஸ் குழுகள் பங்கேற்ற இந்த நடவடிக்கையில், NSO MAPO, தொழிலாளர் துறை (JTK) உள்ளிட்ட பல அமலாக்க அமைப்புகளின் ஒத்துழைப்புடன் 77 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மீட்கப்பட்டவர்களில் 58 ஆண்கள், 23 பெண்கள், மேலும் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 57 சிறுவர்கள் அடங்குவர்.

இவர்கள் மியான்மர் (75), இந்தோனேஷியா (34), வங்கதேசம் (13), பிலிப்பைன்ஸ் (8) மலேசியர்கள் (8) என பல நாட்டினரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவனும் இதில் மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், அடையாள ஆவணங்களை பறிமுதல் செய்தல், சம்பளத்தை தடுத்து வைத்தல், நடமாட்டக் கட்டுப்பாடு, அளவுக்கு மீறிய கூடுதல் வேலை, மோசமான  குடியிருப்பு சூழல் உள்ளிட்ட 8 கட்டாய தொழில்சுரண்டல் குறியீடுகள் கண்டறியப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக, 30 முதல் 69 வயதுக்குட்பட்ட 67 பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டத்தோ குமார் கூறினார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset