நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு மருத்துவமனைகளில் வெளிநாட்டவர்களின் சிகிச்சை கட்டண நிலுவை RM102 மில்லியனை எட்டியது: சுகாதார அமைச்சர் சுல்கிஃப்ளி அஹ்மத்

பெட்டாலிங் ஜெயா:

அரசு கிளினிக் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வெளிநாட்டவர்கள் கட்டணம் செலுத்தத் தவறியதால், 2023 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் நிலுவைத் தொகை RM102 மில்லியனை எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுல்கிஃப்ளி அஹ்மத் கூறினார்.

இது பொது சுகாதார அமைப்பிற்குத் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக அவர்  தெரிவித்தார்.

இந்தத் தொகை, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் வார்டுகளை மேம்படுத்த 2026 பட்ஜெட்டில் அரசு அறிவித்த RM100 மில்லியன் ஒதுக்கீட்டிற்கு சமமானதாகும் என்று அவர் கூறினார்.

வெளிநாட்டவர்களின் சிகிச்சை கட்டண நிலுவை 2023-ல் RM34.97 மில்லியனாக பதிவானது. இது 2024-ல் RM33.46 மில்லியனாக உயர்ந்ததுடன், கடந்த ஆண்டு RM30.57 மில்லியனாகக் குறைந்ததாகச் சுகாதார அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மத் தெரிவித்தார்.

2025-க்கு முந்தைய இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 8.64 சதவீதம் அல்லது RM2.89 மில்லியன் குறைவு ஏற்பட்டிருந்தாலும், அந்தத் தொகை இன்னும் நாட்டின் பொது சுகாதாரச் செலவுகளுக்கு சுமையாகவே இருப்பதாக அவர் கூறினார்.

“உதாரணமாக, 2025-ல் சட்டவிரோத குடியேறிகள் (PATI) RM22.40 மில்லியன் நிலுவையைப் பதிவு செய்துள்ளனர். இது மொத்தமாக செலுத்தப்படாத சிகிச்சை கட்டணத்தின் 73.30 சதவீதமாகப்  பதிவாகியுள்ளது.

“முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் RM2.89 மில்லியன் குறைவு ஏற்பட்டிருந்தாலும், நிலுவைத் தொகை இன்னும் RM30 மில்லியன் அளவிலேயே உள்ளது,” என அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டவர்கள் அரசு மானியங்களைப் பெற முடியாததால் அவர்களுக்கு விதிக்கப்படும் சிகிச்சை கட்டணம், மலேசிய குடிமக்களைவிட அதிகமாக இருப்பதாக சுல்கிஃப்ளி விளக்கினார்.

உதாரணமாக, வெளிநாட்டு நோயாளிகளுக்கான வெளிநோயாளர் சிகிச்சை கட்டணம் RM120 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மலேசிய குடிமக்களுக்கு அது RM1 மற்றும் RM5 மட்டுமே ஆகும்.

கட்டண வசூல், நிலுவைக் கண்காணிப்பை மேம்படுத்த சுகாதார அமைச்சகம் (KKM) பல்வேறு நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். அதில், சிகிச்சை வழங்குவதற்கு முன் வெளிநாட்டவர்களிடம் முன்பணம் (deposit) வசூலிப்பதும் அடங்கும்.

மேலும், வெளிநாட்டு ஊழியர்களின் சிகிச்சை கட்டணத்தை செலுத்தத் தவறும் நிறுவனங்கள் அல்லது முதலாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

“வெளிநாட்டு நோயாளிகளின் நிலுவைத் தொகையை வசூலிக்க, அவர்களின் குடும்பத்தினருடன் ஒருங்கிணைப்பு செய்ய வெளிநாட்டு தூதரகங்களுடன் சுகாதார அமைச்சகம் இணைந்து செயல்படுகிறது.

“அத்துடன், சிகிச்சை செலவைச் சமாளிக்க முடியாத வெளிநாட்டவர்களுக்கு உதவ முன்வரும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையம் (UNHCR), அரசுசாரா அமைப்புகள் (NGO) உடனும் நாங்கள் ஒத்துழைக்கிறோம்.

வெளிநாட்டு ஊழியர்களின் நிதி பாதுகாப்பை வலுப்படுத்த, குடிநுழைவு துறையுடன் இணைந்து, தற்காலிக வேலை அனுமதி (PLKS) விண்ணப்பத்தின் போது முதலாளிகள் கட்டாயமாக வெளிநாட்டு ஊழியர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கு  (SPIKPA) பங்களிக்க வேண்டும் என்ற விதிமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக சுல்கிஃப்ளி கூறினார்.

சட்டவிரோத குடியேறிகள் உள்ளிட்ட வெளிநாட்டு நோயாளிகள் தொடர்பான சிகிச்சை கட்டண நிலுவை பிரச்சினையை முழுமையாக கையாள, அரசுத் துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, புதிய செயல்திட்டங்களை உருவாக்க சுகாதார அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset