நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரே நொடியில் அழிந்த 25 ஆண்டுக்கால உழைப்பு: RM35,000 பணம் தீக்கிரை

கோல கெடா:

நேற்று இரவு ஜாலான் கிலாங் பாஜா, கம்புங் மஸ்ஜித் லாமா பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில், ஒரு கடையும் இரண்டு வீடுகளும் தீக்கிரையாகியதில், மளிகை கடை நடத்தி வந்த வியாபாரி ஒருவருக்கு RM35,000-க்கும் மேற்பட்ட இழப்பு ஏற்பட்டது.

இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் போது, 59 வயதான சத்ரா இஸ்மாயில், அவரது கணவர் பஷிருல் அப்துல் (62), இளைய மகன் அஹ்மத் அடிப் பஷிருல் (27) ஆகியோர் அந்த இரு மாடி வீட்டின் கீழ்தளத்தில் இருந்துள்ளனர்.

புகை வாசனை உணர்ந்த பின்னர் வீட்டின் மேல்தளத்தில் இருந்து தீப்பற்றியது தெரியவந்ததாகவும், உடனடியாக கணவரையும் மகனையும் வேகமாக அழைத்து வெளியேறச் செய்ததாகவும் சத்ரா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினருக்குத் தகவல் அளித்ததாகவும், பின்னர் தனது வீட்டின் பின்புறம் உள்ள சகோதரியின் வீடும் தீப்பிடித்ததைக் கண்டதாகவும் கூறினார்.

“என் RM35,000 முழுவதும் எரிந்து போய்விட்டது. அந்த பணத்தை பிளாஸ்டிக்கில் கட்டி உடை வைக்கும் அலமாரியின் அருகில் தொங்கவிட்டிருந்தேன். கடைக்கானச் சரக்குகள் வாங்க அந்தப் பணம் வைக்கப்பட்டிருந்தது. 

பணத்தையும் நகைகளையும் காப்பாற்ற முயன்றேன். ஆனால் தீ வேகமாக பரவியதால் வீட்டுக்குள் செல்ல சுற்றியுள்ளவர்கள் அனுமதிக்கவில்லை. என்னிடம் இருந்தது எனது அடையாள அட்டை மட்டும் தான்,” என அவர்  தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் அவரது நகைகளும் மகனின் மோட்டார் சைக்கிளும் முற்றிலும் சேதமடைந்ததாக கூறினார்.

25 ஆண்டுகளாக நடத்தி வந்த மளிகை கடை ஒரே நொடியில் அழிந்ததை நினைத்து மிகுந்த வேதனையடைந்ததாகக் கூறிய சத்ரா, தங்களது குடும்பம் உயிருடன் தப்பியதற்காக இறைவனுக்கு நன்றியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

நேற்று இரவு 8.08 மணிக்கு இரண்டு வீடுகளிலும் ஒரு மளிகை கடையும் தீ விபத்து ஏற்பட்டதாகத் தம் குழுவுக்குத் தகவல் கிடைத்ததாகக் கெடா மாநில தீயணைப்பு, மீட்பு துறை (JBPM) மண்டலம் 1 தலைவர், மூத்த தீயணைப்பு அதிகாரி I அஹ்மத் அமினுதீன் அப்துர் ரஹீம் தெரிவித்தார்.

ஜாலான் ராஜா தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த குழுவுடன், அலோர் ஸ்டார் நிலையத்திலிருந்தும் படையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக அவர் கூறினார்.

தீ அருகிலுள்ள வீடுகளுக்குப் பரவாமல் தடுக்க தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தீ விபத்தில் இரண்டு வீடுகள், ஒரு கடை 80 சதவீதத்திற்கும் அதிகமாக சேதமடைந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset