நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

உலக சந்தை அதிர்வுகள்: டாலர் சற்றே வலுவடைந்த நிலையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது

நியூயார்க்:

வட்டி விகிதங்கள் தொடர்பாக அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve – Fed) எடுக்கும் நிலைப்பாட்டை வர்த்தகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், அமெரிக்க டாலர் சற்றே மீண்டது. அதே நேரத்தில், உலகளாவிய பொருளாதார சந்தையில்    பாதுகாப்பான முதலீட்டு சொத்துகளை நாடிய முதலீட்டாளர்களின் தேவை அதிகரித்ததால், தங்க விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதற்கு முன்,  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டாலர் மதிப்பு சரிவடைந்ததைக் குறித்து “எனக்கு கவலை இல்லை” என தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை டாலர் கடும் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தது. இதன் விளைவாக, யூரோவுடன் ஒப்பிடுகையில் டாலர் மதிப்பு நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 1.20 அமெரிக்க டாலர் என்ற நிலைக்கு வீழ்ந்தது.

“இது நல்லதே என்று நினைக்கிறேன்… நாம் செய்யும் வணிகங்களால் டாலர் நன்றாக உள்ளது,” என ட்ரம்ப் தெரிவித்தார். இந்தக் கருத்து, டாலர் மதிப்பு மேலும் குறைவதை வெள்ளை மாளிகை அனுமதிக்கத் தயாராக இருக்கலாம் என்ற ஊகங்களை அதிகரித்தது.

மேலும், ஜப்பான் யென் மாற்று விகிதம் தொடர்பாக நியூயார்க் ரிசர்வ் வங்கி வர்த்தகர்களுடன் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல், யென்னை ஆதரிக்க அமெரிக்கா–ஜப்பான் இணைந்த தலையீடு நடைபெறக்கூடும் என்ற பேச்சுகளைத்  தூண்டியது.

இதற்கிடையில், அமெரிக்க டாலர் தொடர்ந்து பலவீனமடைந்த நிலையில், பாதுகாப்பான முதலீட்டு சொத்துகளுக்கான தேவை அதிகரித்ததால், தங்க விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 5,278.30 அமெரிக்க டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது. 

முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்தாலும், மத்திய வங்கி தற்போதைக்கு வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பலவீனமான டாலர் பணவீக்கத்தை அதிகரிக்க  வாய்ப்பு உள்ளதால் இந்த ஆண்டில் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பணவீக்கம் குறித்த கவலைகள், புதிய சுங்க வரி அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், Fed-ன் கொள்கை திசையை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் நிலையில், டாலர் பலவீனமடைந்து, தங்க விலை உயர்ந்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கலவையான நிலையை பதிவு செய்துள்ளன.

மலேசிய தங்க சந்தையில் இன்று காலை 12 மணி நிலவரப்படி தலைநகரில் ஒரு கிராம் 916 ஆபரணத்தங்கம் 675 ரிங்கிட்டிற்கு விற்பனை ஆனது. 

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset