நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரஃபிசி மகன் தாக்குதல் வழக்கு: விசாரணை தகவல்கள் தர உள்துறை அமைச்சகம் மறுப்பு 

கோலாலம்பூர்-

பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் மகன் மீது நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை விவரங்களை, நாடாளுமன்றத்தில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த உள்துறை அமைச்சகம் (KDN) மறுத்துள்ளது.

டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் இதனை உறுதிப்படுத்தினார்.

இவ்விவரங்களை வெளியிடுவது சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் முக்கிய சாட்சிகளின் பாதுகாப்புக்கும் ஆபத்தாக அமையலாம் என அவர் தெரிவித்தார்.

“பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் மீதான தாக்குதல் விசாரணை தொடர்பான தகவல்களைப் பொதுமக்களுக்கு உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ள நிலையில், அத்தகைய உறுதிப்படுத்தல் சந்தேக நபர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும்; அதேசமயம் முக்கிய சாட்சிகளின் பாதுகாப்பையும் பாதிக்கலாம்.

“எனவே, அந்த கோரிக்கையை நிறைவேற்ற இயலாது,” என்று அவர், நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிவில் தெரிவித்துள்ளார்.

1 டிசம்பர் 2025 அன்று தனிப்பட்ட முறையில் தன்னிடம் பகிரப்பட்ட விசாரணைத் தகவல்களைப் பொதுவெளியில் உறுதிப்படுத்துமாறு உள்துறை அமைச்சரிடம் ரஃபிசி கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சைபுதீன் இவ்வாறு கூறினார். அந்த தகவல்கள், அவரது மகன் மீது நடந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள முதன்மை காரணத்தைக் கண்டறியும் விசாரணை முடிவுகளைச் சார்ந்தவையாகும்.

இந்தத் தாக்குதல் சம்பவம் 13 ஆகஸ்ட் 2025 அன்று நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில், ரஃபிசியின் 12 வயதான ஒரே மகன் புத்ராஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், அடையாளம் தெரியாத ஒருவரால் தாக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதி நிலைநாட்டப்படுவதில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்று KDN உறுதியளிப்பதாக சைபுதீன் தெரிவித்தார்.

“விசாரணையைப் பாதிக்காமல் பொதுமக்களுக்குத் தெரிவிக்கக்கூடிய தகவல்கள், உள்துறை அமைச்சகம் அல்லது மலேசிய அரச காவல்துறை (PDRM) அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் அறிவிக்கப்படும்,” என்றார் அவர்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள், ரஃபிசியின் ஓட்டுநர், பணியாளர்கள், சம்பந்தப்பட்ட வளாகத்தின் நிர்வாகத்தினர் உள்ளிட்ட 19 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக PDRM தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகள் தெளிவாக இல்லாததால், இதுவரை சந்தேக நபரை அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset