நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர்களின் ஆங்கில மொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது: டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

நாட்டின் தொழிலாளர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை வலுப்படுத்துவதற்காக மனிதவள அமைச்சு மூன்று உத்திகளைச் செயல்படுத்தி வருகிறது.

இதில் அதன் கீழ் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்களில் தொழில்நுட்ப, தொழில்முறை கல்வி, பயிற்சி (திவேட்) பாடத்திட்டங்களை மேம்படுத்துவதும் அடங்கும்.

மலாய் மொழியின் தேசிய மொழி அந்தஸ்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்கிய மற்றும் முறையான அணுகுமுறையின் மூலம், தொழிலாளர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை படிப்படியாக வலுப்படுத்த அமைச்சு  உறுதி கொண்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியிலான வேலைச் சூழல், உயர்தொழில்நுட்பம், தானியங்கி முறை,  செயற்கை நுண்ணறிவு  ஆகியவற்றால் இயக்கப்படும் இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கும், குறிப்பாகப் புதிய பணியாளர்கள், திவேட் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கும் ஆங்கில மொழிப் புலமை என்பது ஒரு முக்கியமான அடிப்படைத் தகுதியாகும்.

திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் பயிற்சி நிலையங்களில், திவேட் பாடத்திட்டங்களை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்புப் பொருட்களை இரண்டு மொழிகளில் (மலாய், ஆங்கிலம்) பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறோம்.

அதேபோல், வேலை செய்யும் இடத்தில் நடக்கும் நிஜமான சூழல்களை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி முறைகளும், மாணவர்கள் செய்யும் படைப்புகள் மற்றும் தேர்வுகளை ஆங்கிலத்தில் நடத்துவதும் இதில் அடங்கும்."

மனிதவளத் துறையின் கீழ் முழுநேரக் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும், தங்களது படிப்பு காலம் முழுவதும் ஆங்கிலப் பாடத்தை ஒரு கட்டாயப் பாடமாகப் பயில வேண்டும் என்ற திட்டத்தின் மூலம் ஆங்கில மொழிப் புலமைக்கு ஆதரவு வழங்கப்படுகிறது என்று இன்று நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில் டத்தோஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

மலேசியாவின் அனைத்துத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் ஆங்கில மொழிப் புலமையை வலுப்படுத்துவதற்கு, மனிதவள அமைச்சு எந்த அளவிற்குத் தயாராக உள்ளது.

அதற்கான உரிய திட்டங்களை உருவாக்கியுள்ளதா? என்று டத்தோ இஸ்கண்டார் சுல்கர்னைன் அப்துல் காலிட் (தேசியக் -கோலாகங்சார்) கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அதே வேளையில், உலகளாவிய தொழில்துறை சார்ந்த துறைகளுக்காகத் தயாரிக்கப்படும் 'தேசிய வேலைத்திறன் தரநிலை' (NOSS) பாடத்திட்டங்களில், ஆங்கில மொழிப் பயன்பாட்டையும் ஒரு முக்கிய அங்கமாக மனிதவள அமைச்சு இணைத்து வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset