நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் ஜனவரி 23, 24, 25 தேதிகளில் Global SIRAT Forum 2026: ஏற்பாடுகள் தீவிரம்

கோலாலம்பூர்:

மலேசியா இந்திய முஸ்லிம் வர்த்தக சபையும் (MIMCOIN) முஃமின் (MUKMIN) அமைப்பும் இணைந்து  SIRAT - Global SIRAT Forum 2026 கோலாலம்பூரில் ஜனவரி 23, 24, 25 தேதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

உலகம் முழுவதிலுமிருந்து 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 750க்கும் அதிகமான தமிழ் பேசும் முஸ்லிம் வர்த்தகர்களை ஒரே தளத்தில் இணைக்கும் முதலாவது சர்வதேச மாநாடாக இது அமைகிறது. இதில் செல்வாக்குமிக்க தொழிலதிபர்கள், நிபுணர்கள், இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

2026 SIRAT உலகளாவிய மன்றம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களை ஒரே வலுவான, ஒருங்கிணைந்த தளத்தின் கீழ் ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத்துவம் கொண்ட முயற்சி இது.

வலுவான உலகளாவிய வணிக சமூகத்தை கூட்டாக உருவாக்குவதோடு, ஒத்துழைப்பு, வளர்ச்சி, புதுமைக்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். அதே சமயம், கலாச்சார அடையாளம், இறை நம்பிக்கை, உலகளாவிய செல்வாக்கை வலுப்படுத்தி கொண்டாடுவதையும் இந்த SIRAT இலக்காகக் கொண்டுள்ளது.

SIRAT மூன்று அடிப்படை நோக்கங்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் முஸ்லிம்களின் அடையாளம், மதிப்பீடுகள், கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்து மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. 

அதனையடுத்து, உலகளாவிய தொழிலதிபர்களையும் நிபுணர்களையும் அறிமுகப்படுத்துவதோடு இணைப்பைஏற்படுத்தி அடுத்த தலைமுறையை உலகளாவிய வணிக,பொருளாதாரத் துறையில் தலைவர்களாக உருவாக்குவதையும் இந்த மாநாடு இலக்காகக் கொண்டுள்ளது. 

மேலும், தொழிலதிபர்கள் விரிவுபடுத்தக்கூடிய நிறுவனங்களை உருவாக்கவும், பொருளாதார ஆற்றலை உயர்த்தவும், நீடித்த உலகளாவிய வெற்றியை அடையவும் இந்த  மாநாடு வழிவகுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த மாநாட்டின் மூலம் கட்டமைக்கப்பட்ட வணிக இணைப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்ட வலையமைப்புகள், மதிப்புமிக்க விருதுகள், சிறப்பு விருந்து ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இவை பங்கேற்பாளர்களுக்கிடையே அர்த்தமுள்ள தொடர்பையும் அறிவுப் பகிர்வையும் கூட்டாண்மைகளை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் முக்கிய உரைகள், உலகளாவிய பொருளாதாரம், நவீன தொழில்கள், வர்த்தகம், இஸ்லாமிய நிதி, முதலீடு, கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, சமூக வளர்ச்சி, ஸ்டார்ட்-அப்கள், புத்தாக்க தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளில் ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவுத் தலைமையில் அமைந்த குழு தீவிரமாக செய்து வருகிறது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset