நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தை பிறந்தால் வழி பிறக்கும், நம்பிக்கையுடன் முன்னேறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

தமிழர்களின் சுபவிழாக்களில், ஆண்டின் புதிய தொடக்கமாய் அமைகின்ற தைத்திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை இன்று உற்சாகம் குன்றா வரவேற்கும் அனைவருக்கும் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார். 

பி.கே.ஆர். கட்சியின் தேசிய உதவித் தலைவருமான அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:-

தைப்பொங்கல் திருநாள் என்பது இயற்கைக்கு நன்றி செலுத்துதலோடு, இறைவனால் நமக்கு கிடைக்கப்பெற்ற அருட்கொடைகளையும் உழைப்பின் பலனையும் போற்றும் ஓர் உன்னத அடையாளமாகும்.

இந்தத் திருநாள் கடின உழைப்பு, குடும்ப ஒற்றுமை, பரஸ்பர மரியாதை, சமூக நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளைப் பிரதிபலிக்கிறது. 

பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில், இன மத வேறுபாடுகளின்றி மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், உறவுகளை மேம்படுத்தவும் இந்தப் பண்டிகை ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது. 

இதுவே அமைதி மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழும் நம் பல்லினச் சமூகத்தின் உண்மையான வலிமையாகும்.
மலேசியா மடானி கோட்பாட்டிற்கு இணங்க, தேசிய வளர்ச்சி, நீதி மற்றும் பொதுவான நல்வாழ்வு ஆகியவற்றை முன்னிறுத்தி, மக்களின் நலன், தொழிலாளர்களின் பாதுகாப்பு, பல்லினச் சமூகத்தின் இணக்கத்தை உறுதிப்படுத்துவதில் நான் என்றும் உறுதியுடன் இருப்பேன்.

இறுதியாக, இந்தப் பொங்கல் திருநாளில் உங்கள் அனைவருக்கும் நல் ஆரோக்கியம், வெற்றி, செல்வம், மகிழ்ச்சி பெருக வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் பழமொழிக்கு ஏற்ப, இந்தத் தை மாதத்தின் வருகை புதிய வாய்ப்புகளையும் வழிகளையும் திறக்கட்டும். சிறந்ததொரு எதிர்காலத்தை நோக்கி மிகுந்த நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset