நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய சமுதாயத்தில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் முன்னிறுத்தி நம் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைந்திட இந்த பொங்கல் திருநாள் துணை நிற்கட்டும். 

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் இதனை கூறினார்.

2026 பொங்கல் திருநாளை முன்னிட்டு மலேசிய இந்திய சமுதாயத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழனியில் ஏரோட்டினாலும் வீதியில் தேரோட்டிய செம்மாந்த இனம் தமிழினம். 

அத்தகைய தமிழ் முன்னோர் வாழ்விற்கு வளம் சேர்க்கும் வேளாண் தொழிலின் வினை பயனான அறுவடையைக் கொண்டாடும் விதமாகவும் ஒற்றுமை விழாவாகவும் காலந்தோறும் தை மாத முதல் நாளில் கடைபிடிக்கின்றனர்

வேளாண் தொழிலுக்கு அடியும் முதலுமாக இருந்து துணை நிற்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லவும் வாழ்வின் எல்லா கட்டத்திலும் துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி பாராட்டவும் பொங்கல் நாளை வகுத்துள்ளனர். 

இந்த இருநாள் விழாவுக்கும் முன்னதாக போகிப்பண்டிகை என்னும் பெயரில் தீதை விளக்கி, நன்மையை கைக்கொள்ளும் விதமாக கொண்டாடிய அதேவேளை நிறைவு நாளாக காணும் பொங்கல் அல்லது  கன்னிப் பொங்கல் என்னும் வகையில் ஒரு சமூக கூட்டு விழாவாக நான்கு நாள் திருவிழாவை ஒற்றுமைத் திருவிழாவாக பொங்கல் சமயத்தில் கொண்டாடி குதூகலிக்கும் பாங்கினை காலங்காலமாக கடைபிடித்து வருகின்ற இனம் தமிழினம்.

அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு பொங்கல் விழாவும் மலேசிய இந்திய சமுதாயத்தில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் முன்னுறுத்தி நம் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைந்திட இந்த பொங்கல் திருநாள் துணை நிற்கட்டும்.

அதேவேளை நம்முடைய எதிர்காலம் இந்த மண்ணில் மிகவும் கேள்விக்குறியாக தெரிவதையும் இந்திய சமுதாயத்தினர் அவதானிக்க வேண்டும். 

எனவே மலேசியாவில் வாழ்கின்ற இந்திய சமுதாயத்தினர் அனைவரும் அனைத்து  வேறுபாட்டையும் மறந்து ஒற்றுமை என்ற ஒரே எண்ணத்தை மனதில் கொண்டு அனைத்து சமூக மக்களோடும் ஒன்றிணைந்து இந்த பொங்கல் நன்னாளை கொண்டாடுவோம் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset