நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மூன்று பேரின் உயிரிழப்பிற்கு காரணமான நபர் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார் 

கோத்தா திங்கி

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மூன்று பேரின் மரணத்திற்கு காரணமான 32 வயதுடைய நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அந்த நபரை போலீசார் நிதிமன்றம் கொண்டுவந்தனர்.

இன்று திங்கட்கிழமை பெங்கேராங் நீதிமன்றத்தில் நீதிபதி ஹிதாயத்துல் சுஹாதா ஷம்சுதின் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது சக்கர நாற்காலியில் வந்த லூ சுன் ஹாவ் நீதிமன்றத்தில் தான் குற்றம் செய்யவில்லை என தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகையின் படி, கடந்த அக்டோபர் 11 அன்று காலை 11.45 மணியளவில் செனாய்–டெசாரு நெடுஞ்சாலையின் கி.மீ. 56-இல் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதன் காரணமாக முஹம்மது அப்துல் காலித் அப்த் ரஷீத் (19), முஹம்மது ஹஃபிஸான் ஹனாஃபி நொர்ஹைசால் (21), ஃபஸ்ரிசல் இசுவான் சுஹைமி (20) ஆகிய மூவரும் உயிரிழந்ததாக லூ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இக்குற்றம் சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM50,000 அபராதமும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

அதே நீதிமன்றத்தில், RM3,894 மதிப்புள்ள வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வைத்திருந்ததாக சுங்கச் சட்டம் 1967ன் பிரிவு 135(1)(d)ன் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கும் லூ  தான் குற்றவாளி இல்லை என பதிலளித்தார்.

முன்னாள் இ-ஹெய்லிங் ஓட்டுநரான லூ, குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் இந்த குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்குத் தொடர்ந்த ஆய்வாளர் நோர் ஆயு ஹிதாயா முஹம்மது சாஃப்ரி, சுங்கச் சட்ட குற்றத்திற்கு RM10,000 - மும்  சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழான ஒவ்வொரு குற்றத்திற்கும் RM5,000 - மும் ஜாமீன் நிர்ணயிக்கக் கோரினார்.

ஆனால், விபத்தில் காயமடைந்து தற்போது மீண்டு வரும் நிலையில் தான் வேலையின்றி  உள்ளதால், குறைந்த ஜாமீன் வழங்குமாறு பாதுகாப்பு வழக்கறிஞர் கே. சரவணன் நீதிமன்றத்தில் கோரினார்.

இதையடுத்து, அனைத்து குற்றங்களுக்கும் ஒரே உத்தரவாதத்துடன் RM15,000 ஜாமீன் நிர்ணயித்த நீதிபதி, பிப்ரவரி 6 வழக்கின் அடுத்த விசாரனை தொடரும் என்றார்.

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset