நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பழைய வங்கிக் கணக்குகளில் எடுக்காமல் இருக்கும் பணத்தை திரும்ப எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது

புது டெல்லி:

பல ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு, தற்போது பயன்படுத்தாமல் இருக்கும் பழைய வங்கிக் கணக்குகளில் எடுக்கப்படாமல் இருக்கும் பணத்தை எடுத்துவிட்டு, வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடுவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது.

உங்கள் பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை திரும்பப்பெற ரிசர்வ் வங்கி (RBI) உங்களுக்கு உதவும் என்று மக்களுக்கு குறுந்தகவல்கள் வாயிலாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தினர் பயன்படுத்திய வங்கிக் கணக்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கலாம்.

ஒருவேளை அந்த வங்கிக் கணக்கில் ஒரு தொகை எடுக்கப்படாமல் விடுபட்டிருந்தால், அந்த நிதி ரிசர்வ் வங்கியின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் வரவு வைக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை திரும்பவும் கோரும் உரிமை உங்களுக்கு இப்போதும் உள்ளது.

அதற்கு முதலில், வங்கிக் கணக்குகளில் கோரப்படாத வைப்புத் தொகைகளைச் சரிபார்க்க https://udgam.rbi.org.in என்ற இணையதளம் சென்று உங்கள் விவரங்களை அளித்து உறுதி செய்து கொள்ளலாம்.

பிறகு, ஒருவர் கணக்கு வைத்திருந்த வங்கியின் எந்தக் கிளைக்கும் செல்லலாம். உரிய கிளைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அங்கு, வங்கிக் கணக்கு வைத்திருந்தவரின் கேஒய்சி (KYC) சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு, ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களின் நகல்கள் தேவைப்படும்.

கேஒய்சி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வங்கிக் கணக்கில் இருக்கும் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுங்கள். தகுதிவாய்ந்த வங்கிக் கணக்காக இருந்தால், அந்தத் தொகை வட்டியுடன் திரும்ப ஒப்படைக்கப்படும்.

உங்களுக்குத் தேவையில்லை எனில், அந்த வங்கிக் கணக்கை நிரந்தமாக மூடிவிடலாம்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset