செய்திகள் இந்தியா
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
ஷில்லாங்:
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியின் மைன்ஸ்ங்காட்–தாங்ஸ்காய் பகுதியில் அங்கீகரிக்கப்படாத நிலக்கரிச் சுரங்கம் ஒன்று செயல்பட்டுவந்திருக்கிறது.
இந்தச் சுரங்கத்தில் நேற்று அதிகாலை தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் இரவு வரை மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய விகஷ் குமார், ``மீட்புப் பணியின் போது இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயமடைந்த ஒரு தொழிலாளி மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்" என்றார்.
இந்த விபத்து 'எலி வளைச் சுரங்கம்' (Rat-hole mining) எனப்படும் ஆபத்தான முறையால் ஏற்பட்டுள்ளது. நிலக்கரியைப் பிரித்தெடுக்க வெறும் 3 முதல் 4 அடி உயரமே கொண்ட குறுகிய குகைகளைத் தோண்டும் இம்முறை, மேகாலயாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறுகிய லாபத்திற்காக இந்த விதிகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை, இந்தச் சட்டவிரோத சுரங்கப் பின்னணியில் இருப்பவர்கள் குறித்த தகவல்களைத் தருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
