செய்திகள் இந்தியா
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
கௌஹாட்டி:
அசாமில் யானைக் கூட்டம் மீது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்தன. இதனால் 5 பெட்டிகள் தடம்புரண்டன.
மிசோரம் தலைநகர் ஐஸ்வால் அருகில் உள்ள சாய்ராங்-கில் இருந்து டெல்லி ஆனந்த்விஹாருக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டது. இது நேற்று அதிகாலை அசாமின் ஹோஜாய் மாவட்டம், சாங்ஜுராய் என்ற கிராமத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைக் கூட்டம் மீது மோதியது. இதில் 8 யானைகள் உயிரிழந்தன.
இதுகுறித்து வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கபிஞ்சல் கிஷோர் கூறுகையில், “குவாஹாட்டியில் இருந்து 125 கி.மீ. தொலைவில், யானைகள் கடந்து செல்லும் பகுதியாக அறிவிக்கப்படாத இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. சுமார் 100 யானைகள் தண்டவாளத்தை கடப்பதை கண்ட லோகோ பைலட் (இன்ஜின் டிரைவர்) எமர்ஜென்சி பிரேக் மூலம் ரயிலை நிறுத்தினார். எனினும் சில யானைகள் மீது ரயில் மோதிவிட்டது.
இந்த விபத்தில் 5 பெட்டிகள் தடம்புரண்டன. எனினும் பயணிகள் காயம் அடையவில்லை. தடம்புரண்ட பெட்டிகளில் இருந்த 200 பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டு, ரயில் தனது பயணத்தை தொடர்ந்தது. குவாஹாட்டியில் ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.
இந்த விபத்தை தொடர்ந்து அவ்வழியே செல்லும் 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 13 ரயில்கள் தாமதம் அடைந்தன. மேலும் 2 ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த மாதம், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் ரயில் மோதியதில் ஒரு யானை உயிரிழந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
